சென்னை மாநகராட்சி பகுதியில் மழைநீரை வெளியேற்றும் பணியில் 4 ஆயிரம் ஊழியர்கள்
|சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் மழைநீரை வெளியேற்றவும், மரங்களை அகற்றவும் 4 ஆயிரம் ஊழியர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை கூடுதல் செயலாளர் சிவ்தாஸ் மீனா தெரிவித்தார்.
சென்னை,
சென்னை மாநகராட்சி ரிப்பன் கட்டிடத்தில், தென்மேற்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்வது குறித்த கட்டுப்பாட்டு மையம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த மையத்தை, நேற்று நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை கூடுதல் செயலாளர் சிவ்தாஸ் மீனா நேரில் ஆய்வு செய்தார். அப்போது, சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் மழைநீர் வெளியேற்றும் பணிகளை பார்வையிட்டு ஊழியர்கள் விழிப்புணர்வுடன் பணிகளை மேற்கொள்ள அறிவுறுத்தினார். ஆய்வின் போது, இணை கமிஷனர் ஜி.எஸ்.சமீரன், துணை கமிஷனர் விசு மகாஜன் உடன் இருந்தனர்.
இதைத்தொடர்ந்து, சிவ்தாஸ் மீனா நிருபர்களிடம் கூறியதாவது:-
கடந்த 24 மணி நேரத்தில் சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் சராசரியாக 10.3 செ.மீ. மழை பெய்துள்ளது. இருந்த போதிலும் பெரிய அளவிற்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. சில இடங்களில் மட்டுமே நீர் தேங்கியிருந்தது. சுமார் 83 இடங்களில் நீர்தேக்கம் உள்ளதாக பொதுமக்களிடம் புகார்கள் பெறப்பட்டு அவற்றின் மீது உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. தற்போது 25 இடங்களில் மோட்டார் பம்புகள் அமைக்கப்பட்டுள்ளது. மேலும், மழைநீர் தேங்காத வகையில் நடவடிக்கை எடுக்க 260 நீரிறைக்கும் மோட்டார் பம்புகள் தயார் நிலையில் உள்ளது. மொத்தம் 22 சுரங்கப்பாதைகளில் கணேசபுரம் சுரங்கப்பாதையில் மட்டுமே தண்ணீர் தேங்கியிருந்தது. இதையும் உடனடியாக அகற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
4 ஆயிரம் ஊழியர்கள்
அயனாவரம் பகுதியில் மழைநீர் வடிகால் அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த வருடம் ரூ.232 கோடி மதிப்பீட்டில் புதிதாக மழைநீர் வடிகால் அமைக்க பணி ஆணை வழங்கப்பட்டு பணிகள் நடைபெற்று வருகிறது. இப்பணிகள் அனைத்தும் 3 மாதங்களில் முடிவடையும். தற்போது பெய்யும் மழையில் நீர் தேங்கும் இடங்கள் கண்காணிக்கப்பட்டு, அவை வடகிழக்கு பருவமழைக்கு முன்னதாக சரிசெய்ய தகுந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
கடந்த 2 ஆண்டுகளில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளின் காரணமாக தற்போது மழைநீர் தேங்கவில்லை. வடகிழக்கு பருவமழைக்கு முன்னதாக, மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் உட்புறச் சாலைகள் அமைக்க சுமார் ரூ.500 கோடி மதிப்பீட்டில் ஒப்பந்தபுள்ளிகள் கோரப்பட்டுள்ளது. மழைநீர் வடிகால் முடிக்கப்பட்ட இடங்கள், சேதமடைந்த சாலைகள் ஆகியவற்றில் புதிதாக சாலை அமைக்கும் பணிகள் 3 மாதங்களில் முடிவடையும். இதேபோல, மழைநீரை வெளியேற்றவும், மரக்கிளைகளை அகற்றவும் மாநகராட்சியின் சார்பில் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இவ்வாறு அவர் கூறினார்.