காதலனுடன் சேர்த்து வைப்பதாக இளம்பெண்ணிடம் 40 பவுன் நகை மோசடி
|காதலனுடன் சேர்த்து வைப்பதாக கூறி சென்னையை சேர்ந்த இளம்பெண்ணிடம் 40 பவுன் நகை மோசடி செய்ததுடன், மேலும் ரூ.5 லட்சம் கேட்டு மிரட்டிய பஞ்சாப் வாலிபர்கள் 2 பேரை சென்னை விமான நிலையத்தில் போலீசார் கைது செய்தனர்.
மீனம்பாக்கம்,
சென்னையை அடுத்த பரங்கிமலையை சேர்ந்த 19 வயது இளம்பெண், பிளஸ்-1 படிக்கும் போது சீனியர் மாணவர் ஒருவரை காதலித்து வந்தார். 2021-ம் ஆண்டு காதலன் வெளிநாட்டுக்கு சென்று விட்டார். அதன்பிறகு அவருடன் எந்தவித தொடர்பும் இல்லை. இதனால் காதலனை கண்டுபிடிக்க இளம்பெண் முயற்சி செய்து வந்தார்.
காதலனை கண்டுபிடிக்க இணையதளங்களை ஆய்வு செய்தார். அப்போது 'ஹவ் டூ பிரிங் பேக் எக்ஸ்' என்ற செயலியை கண்டார். அதில் பிரிந்து போன காதலர்களை சேர்க்க உதவி செய்வதாக குறிப்பிடப்பட்டிருந்தது. இதையடுத்து இளம்பெண் இணையதள செயலியில் தனது பெயரை பதிவு செய்து, தனது காதலன் பற்றிய விவரங்களையும் தெரிவித்தார்.
காதலனோடு சேர்த்து வைக்க...
இதையடுத்து இளம்பெண்ணை இணையதளம் மூலமாக தொடர்பு கொண்ட 2 பேர், சென்னை மீனம்பாக்கம் விமான நிலையம் வரும்படி கூறினர். அதன்படி இளம்பெண்ணும் சென்னை விமான நிலையத்துக்கு வந்தார்.
அப்போது அங்கு வந்த பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த 2 வாலிபர்கள், "நாங்கள் உங்கள் காதலனுடன் உங்களை சேர்த்து வைத்து விடுகிறோம். ஆனால் செலவு அதிகமாகும்" என்று கூறி பணம் அல்லது தங்கநகையை தரும்படி கேட்டனர்.
40 பவுன் நகை
அதை நம்பிய இளம்பெண் தன்னிடம் இருந்த 40 பவுன் தங்க நகைகளை கொடுத்தார். தங்க நகைகளை வாங்கிச் சென்ற பஞ்சாப் வாலிபர்கள், தாங்கள் சொன்னபடி இளம் பெண்ணை, காதலனோடு சேர்த்து வைக்கவில்லை.
மாறாக இளம்பெண்ணை தொடர்பு கொண்டு, "நீ கொடுத்த நகைகள் போதுமானது அல்ல. மேலும் ரூ.5 லட்சம் வேண்டும். இல்லை என்றால் உன்னை பற்றி அவதூறாக இணையதளங்களில் செய்திகளை பரப்பி விடுவோம்" என மிரட்டினர்.
இதனால் பதறிப்போன இளம்பெண், இதுபற்றி சென்னை மீனம்பாக்கம் விமான நிலைய போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.
மடக்கி பிடித்து கைது
அதன்பேரில் இன்ஸ்பெக்டர் பாண்டி தலைமையிலான போலீசார் இளம்பெண்ணை, பஞ்சாப் வாலிபர்களிடம் தொடர்பு கொள்ள செய்தனர். அதன்படி பேசிய இளம்பெண், சென்னை விமான நிலையத்துக்கு வந்தால் நீங்கள் கேட்ட பணத்தை தருகிறேன் என்றார்.
அதன்படி பஞ்சாப் வாலிபர்கள் இருவரும் விமானம் மூலம் சென்னை மீனம்பாக்கம் உள்நாட்டு விமான நிலையத்துக்கு வந்தனர். அப்போது இளம்பெண்ணுடன் மாறுவேடத்தில் நின்றிருந்த போலீசார், 2 பேரையும் மடக்கிப்பிடித்தனர். பின்னர் 2 பேரையும் விமான நிலைய போலீஸ்நிலையத்துக்கு அழைத்துச்சென்று விசாரித்தனர்.
அதில் அவர்கள், பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் பகுதியை சேர்ந்த அனில்குமார் (வயது 27), தரன் பகுதியை சேர்ந்த ககன்தீப் பார்கவ் (33) என்பதும், போலியான இணையதளத்தை தொடங்கி பல இளம்பெண்களையும், இளைஞர்களையும் ஏமாற்றி பல லட்சம் மோசடி செய்ததும் தெரிய வந்தது. 2 பேரையும் கைது செய்த போலீசார், இவர்களிடம் இருந்து ரூ.8.5 லட்சம் மற்றும் 54 கிராம் தங்க சங்கிலிகளை பறிமுதல் செய்தனர். பின்னர் கைதான 2 பேரையும் சிறையில் அடைத்தனர்.