வெளியே 40% தள்ளுபடி விளம்பரம்... உள்ளே 3 மாதம் காலாவதியான பொருள் - கடைக்கு சீல் வைத்த அதிகாரிகள்
|திருப்பத்தூர் அருகே காலாவதியான பொருட்கள் மற்றும் உரிய ரசீது வழங்காமல் இயங்கி வந்த கடைக்கு உணவு பாதுகாப்பு அதிகாரிகள் சீல் வைத்தனர்.
திருப்பத்தூர்,
திருப்பத்தூர் அருகே காலாவதியான பொருட்கள் மற்றும் உரிய ரசீது வழங்காமல் இயங்கி வந்த கடைக்கு சீல் வைத்த நகராட்சி மற்றும் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் பொருட்களை பறிமுதல் செய்தனர்.
வாணியம்பாடி பஜார் பகுதியில் புத்தாண்டு, கிறிஸ்துமஸ், பொங்கல் பண்டிகைகளையொட்டி, தற்காலிக கடை அமைக்கப்பட்டுள்ளன. இந்த கடைகளில் ஒவ்வொரு பொருட்கள் மீதும் 40 சதவீதம் விழாக்கால தள்ளுபடி என்று, விளம்பரம் செய்து விற்பனை செய்து வந்தனர்.
இதையடுத்து வணிகர் சங்கத்தினர் அங்கு சென்று, இவ்வளவு தள்ளுபடி கொடுக்க என்ன காரணம் என்றும், அங்குள்ள உணவு பொருட்களையும் பார்வையிட்டனர். அப்போது அவை அனைத்தும் காலாவதியாகி 3 மாதங்களுக்கு மேல் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
தரமற்ற பொருட்கள் விற்பனை செய்யும் கடை மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், என்று கடையை முற்றுகையிட்டு போராட்டம் செய்தனர். தகவல் அறிந்து வந்த நகராட்சி அதிகாரிகள் மற்றும் உணவு பாதுகாப்பு அதிகாரிகள், காலவதியான பொருள்களை பறிமுதல் செய்து,கடைக்கு சீல் வைத்தனர்.