< Back
மாநில செய்திகள்
பொன்னேரி அருகே விவசாய பயிர்களை மேய்ந்த 40 கால்நடைகள் கோசாலையில் அடைப்பு - உரிமையாளர்கள் சாலைமறியல் செய்ததால் பரபரப்பு
திருவள்ளூர்
மாநில செய்திகள்

பொன்னேரி அருகே விவசாய பயிர்களை மேய்ந்த 40 கால்நடைகள் கோசாலையில் அடைப்பு - உரிமையாளர்கள் சாலைமறியல் செய்ததால் பரபரப்பு

தினத்தந்தி
|
6 July 2023 3:57 PM IST

பொன்னேரி அடுத்த மெதூர் ஊராட்சியில் விவசாய பயிர்களை மேய்ந்த 40 கால்நடைகள் கோசாலையில் அடைக்கப்பட்டது. அதன் உரிமையாளர்கள் சாலைமறியலில் ஈடுபட்டதால் அந்த பகுதியில் பரபரப்பு நிலவியது.

பொன்னேரி அடுத்த மெதூர் ஊராட்சியில் சாலையில் சுற்றித்திரியும் மற்றும் விவசாய பயிர்களை மேய்ந்து நாசம் செய்யும் கால்நடைகளை பிடித்து அடைக்க கோசாலைகள் அமைக்கப்பட்டது.

மேலும் கோசாலையில் அடைக்கப்படும் கால்நடைகளின் உரிமையாளர்களுக்கு ரூ.2000 ஆயிரம் அபராதம் விதித்தும், அதனை பராமரிக்க நாளொன்றுக்கு ரூ.500 வசூலிக்க மாவட்ட கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் உத்தரவிட்டார். இந்த நிலையில் மெதூர் ஊராட்சியில் அடங்கிய அச்சரப்பள்ளம் கிராமத்தில் நெற்பயிர்கள் சேதப்படுத்திய 40 மாடுகளை அந்த பகுதி மக்கள் பிடித்து கோசாலையில் அடைத்தனர்.

இது குறித்து தகவல் அறிந்த மாட்டின் உரிமையாளர்கள் 50-ற்கும் மேற்பட்டோர் ஒன்று திரண்டு கோசாலை அருகே பொன்னேரி- பழவேற்காடு சாலையில் மறியலில் ஈடுபட்டனர். இதனால் அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தகவல் அறிந்த பொன்னேரி தாசில்தார் செல்வகுமார், இன்ஸ்பெக்டர் சின்னதுரை ஆகியோர் சம்பவ இடத்துக்கு சென்று சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து மாடு ஒன்றுக்கு ரூ.300 வீதம் அபராதம் விதிக்கப்பட்டு உரிமையாளர்களிடம் பணம் வசூலிக்கப்பட்டு கால்நடைகள் அதன் உரிமையாளர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இந்த சம்பவம் மெதூர் ஊராட்சியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் செய்திகள்