< Back
மாநில செய்திகள்
ரூ.5 ஆயிரம் லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அலுவலருக்கு 4 ஆண்டு சிறை; திருவள்ளூர் கோர்ட்டு தீர்ப்பு
திருவள்ளூர்
மாநில செய்திகள்

ரூ.5 ஆயிரம் லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அலுவலருக்கு 4 ஆண்டு சிறை; திருவள்ளூர் கோர்ட்டு தீர்ப்பு

தினத்தந்தி
|
31 Jan 2023 6:04 PM IST

ரூ.5 ஆயிரம் லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அலுவலருக்கு 4 ஆண்டு சிறை தண்டனை விதித்து திருவள்ளூர் கோர்ட்டு தீர்ப்பளித்தது.

அம்பத்தூர் அடுத்த பாடி சீனிவாசா நகர் பாரதியார் தெருவை சேர்ந்தவர் கலைச்செல்வன். இவரது மனைவி சுலோச்சனா. கலைச்செல்வன் ஆவடி அடுத்த பொத்தூர் கிராமத்தில் உள்ள பொதிகை நகரில் 1,500 சதுர அடி இடத்தை சுலோச்சனா பெயரில் கிரையம் செய்து அதற்காக பட்டா மாறுதல் பெற வேண்டி கடந்த கடந்த 2012-ம் ஆண்டு பொத்தூர் அலுவலர் கந்தசாமி என்பவரிடம் மனு கொடுத்தார். அப்போது கந்தசாமி பட்டா வழங்க ஏற்பாடு செய்ய வேண்டுமென்றால் ரூ.5 ஆயிரம் லஞ்சம் கொடுத்தால் தான் பட்டா ஏற்பாடு செய்வேன் என்று கூறியுள்ளார்.

இதையடுத்து லஞ்சம் கொடுக்க மனமில்லாத சுலோச்சனா இதுகுறித்து சென்னை லஞ்ச ஒழிப்பு பிரிவு போலீசில் 08-02-2012 அன்று புகார் கொடுத்தார். அதன்படி லஞ்ச ஒழிப்பு போலீசார் ரசாயன பவுடர் தடவப்பட்ட ரூபாய் நோட்டுக்களை சுலோச்சனாவிடம் கொடுத்து அனுப்பி வைத்து கிராம நிர்வாக அதிகாரி கந்தசாமியிடம் பணத்தை கொடுத்த போது லஞ்ச ஒழிப்பு பிரிவு போலீசார் அவரை கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர். பின்னர் அவர் மீது வழக்கு பதிவு செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

இந்த வழக்கு திருவள்ளூர் முதன்மை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இதையடுத்து நேற்று இந்த வழக்கை விசாரணை செய்த திருவள்ளூர் முதன்மை குற்றவியல் நடுவர் மற்றும் சிறப்பு நீதிபதி ஆர்.வேலரஸ் லஞ்சமாக பணம் கேட்ட குற்றத்திற்காக கிராம நிர்வாக அலுவலர் கந்தசாமிக்கு 4 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனையும், ரூ.20 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.

மேலும் செய்திகள்