திண்டுக்கல்
மினிலாரியில் கடத்திய 4 டன் ரேஷன்அரிசி பறிமுதல்
|மினிலாரியில் கடத்திய 4 டன் ரேஷன்அரிசி பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடர்பாக 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
4 டன் ரேஷன்அரிசி
திண்டுக்கல்லை அடுத்த ராமையன்பட்டி அருகே பழனி சாலையில் நேற்று காலை, அரிசி ஏற்றி சென்ற மினிலாரி கவிழ்ந்து கிடந்தது. இதுபற்றி தகவல் அறிந்த திண்டுக்கல் குடிமை பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர்.
விசாரணையில் மினிலாரியில் மூட்டை, மூட்டையாக ரேஷன் அரிசி இருந்தது. மேலும் நிலக்கோட்டையில் இருந்து ஒட்டன்சத்திரத்துக்கு ரேஷன் அரிசியை கடத்தி சென்ற போது மினிலாரி கவிழ்ந்தது தெரியவந்தது.
இதையடுத்து 98 மூட்டைகளில் இருந்த 4 டன் 320 கிலோ ரேஷன் அரிசி மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்திய மினிலாரி ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.
2 பேர் கைது
இதைத் தொடர்ந்து போலீஸ் சூப்பிரண்டு விஜயகார்த்திக்ராஜா உத்தரவின்பேரில், திண்டுக்கல் குடிமை பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு இன்ஸ்பெக்டர் கீதா தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் கார்த்திகேயன் மற்றும் போலீசாரை கொண்ட தனிப்படையினர் ரேஷன் அரிசி கடத்தியவர்கள் குறித்து விசாரித்தனர்.
விசாரணையில் திண்டுக்கல்லை அடுத்த பில்லமநாயக்கன்பட்டி பகுதியை சேர்ந்த தனசேகர் (வயது 43), நிலக்கோட்டை மரியபாளையத்தை சேர்ந்த மினிலாரி டிரைவர் இருதயசாமி (32) ஆகியோர் ரேஷன் அரிசியை கடத்தியது தெரியவந்தது. இதையடுத்து 2 பேரையும் போலீசார் கைது செய்தனர்.