< Back
மாநில செய்திகள்
4 ஆயிரம் ஆண்டுகள் பழமையான   பாறை ஓவியம்-குகைகள் கண்டுபிடிப்பு
மதுரை
மாநில செய்திகள்

4 ஆயிரம் ஆண்டுகள் பழமையான பாறை ஓவியம்-குகைகள் கண்டுபிடிப்பு

தினத்தந்தி
|
11 Aug 2022 1:36 AM IST

திருப்பரங்குன்றம் அருகே 4 ஆயிரம் ஆண்டுகள் பழமையான பாறை ஓவியம்-குகைகள் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.

திருப்பரங்குன்றம்

திருப்பரங்குன்றம் அருகே 4 ஆயிரம் ஆண்டுகள் பழமையான பாறை ஓவியம்-குகைகள் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.

பேராசிரியர்கள் ஆய்வு

மதுரை மாவட்டம், கரடிப்பட்டி மலை என்று அழைக்கப்படும் பெருமாள் மலை கீழக்குயில்குடியில் இருந்து சுமார் 3 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. இந்த பெருமாள் மலை இந்திய தொல்பொருள் ஆராய்ச்சி துறையின் கீழ் பாதுகாக்கப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது. இங்கு 3-ம் நூற்றாண்டைச் சார்ந்த தமிழ் பிராமி எழுத்துக்களும் கற்படுக்கைகளும், 9, 10-ம் நூற்றாண்டைச் சார்ந்த மகாவீரர் சிலை சிற்பமும், 2 புடைப்புச் சிற்பங்களும், வட்டெழுத்துக் கல்வெட்டும் ஏற்கனவே கண்டறியப்பட்டு உள்ளன.

இந்தநிலையில் மன்னர் திருமலை நாயக்கர் கல்லூரியின் வரலாற்றுத் துறை உதவிப் பேராசிரியர்களான கல்வெட்டு ஆர்வலர்கள் ராஜகோபால், பிறையா மற்றும் வரலாற்று சமூக ஆர்வலர்கள் அஸ்வத், தவசி, அஜய்குமார் ஆகியோர் கொண்ட குழு இந்த பகுதியில் ஆய்வில் ஈடுபட்டனர். அப்போது சமண மலையின் ஒரு பாறையில் ஒரு மனித உருவ ஓவியம் செவ்வண்ண நிறத்தில் இருப்பது கண்டறியப்பட்டது.

மனித உருவ ஓவியத்தின் தலை சிறிய முக்கோண வடிவிலான ஆணி தலை போன்று காணப்படுகிறது. ஆடை அணிந்தால் போன்று இருக்கின்ற 2 கால்கள் தெரிகின்றன. இந்த ஓவியம் சுமார் 4 ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டது என்று முன்னாள் தொல்லியல் ஆய்வாளர் சாந்தலிங்கம் உறுதிப்படுத்தி உள்ளார்.

கற்கால குகைகள்

மேலும் பல ஓவியங்கள் அழிந்த நிலையில் காணப்படுகின்றன. அழிந்த ஓவியங்களை குறிப்பாக கண்டறிவது கடினமாக இருக்கிறது. எனவே நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய 3-டி ஸ்கேனிங் மூலமாக இப்பாறை ஓவியங்களை ஸ்கேனிங் செய்வதன் மூலம் ஓவியங்களின் உண்மையான முழு பிரதியை காண இயலும். இந்த ஓவிய பாறையிலிருந்து சுமார் 100 மீட்டர் செங்குத்தான மலையின் பிற்பகுதியில் மனித நடமாட்டம் இல்லாத புதர் அடர்ந்த பகுதியில் 2 கற்கால குகைகள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. ஒவ்வொரு குகையும் சுமார் 10 முதல் 12 பேர் தங்கக் கூடியதாக காணப்படுகிறது. குகைகளில் வாழ்ந்த மனிதர்களுக்கு அன்றாட வாழ்க்கைக்கு தேவைப்படும் குடிநீருக்காக மலையின் உச்சியில் இயற்கையாக அமைந்த சுனை காணப்படுகிறது.

இந்த குகைக்கு அருகே இயற்கையாக அமைந்த உயர்ந்த பாறை காணப்படுகிறது. மிருகங்களின் நடமாட்டத்தை கண்காணிக்கும் கோபுரமாக அந்தப் பாறை அமைந்திருக்கிறது என ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர்.

குகையின் உட்புற மேற்பரப்பு மலையின் பின்புறத்தில் வெடிகள் வைத்து தகர்த்துதன் காரணமாக, அதிர்ச்சியில் குகையின் மேற்பரப்பு சிதிலமடைந்து காணப்படுகிறது. மேலும் இந்த இடத்தில் ஆராய்ச்சியை மேம்படுத்தினால் இன்னும் பல வரலாற்று உண்மைகளை கண்டறிய முடியும் பேராசிரியர் ராஜகோபால், பேராசிரியை பிறையா கூறினர்.

மேலும் செய்திகள்