திண்டுக்கல்
மளிகை கடையில் திருடிய 4 வாலிபர்கள் சிக்கினர்
|திண்டுக்கல் அருகே மளிகை கடையில் திருடிய 4 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.
திண்டுக்கல்லை அடுத்த அதிகாரிபட்டியை சேர்ந்தவர் மனோகரன் (வயது 55). இவர் அதே பகுதியில் மளிகை கடை நடத்தி வருகிறார். கடந்த 3-ந்தேதி இரவு இவர் வழக்கம் போல் கடையை மூடிவிட்டு, தனது வீட்டிற்கு சென்றார். மறுநாள் அதிகாலையில் எழுந்து வந்து கடையை திறந்தார். அப்போது கல்லாவில் வைத்திருந்த பணம் மற்றும் பீரோவின் பூட்டை உடைத்து 9 பவுன் நகை திருடு போயிருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து சாணார்பட்டி போலீசாரிடம் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனர்.
அதில் 4 வாலிபர்கள் மோட்டார் சைக்கிள்களில் சந்தேகப்படும்படி சுற்றியது தெரியவந்தது. இதையடுத்து அதை துருப்புச் சீட்டாக வைத்து போலீசார் மர்ம நபர்களை தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது திண்டுக்கல் ரெயில்நிலையம் அருேக சந்தேகப்படும்படி நின்ற 4 பேரை போலீசார் பிடித்து நத்தம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜசேகர், சாணார்பட்டி சப்-இன்ஸ்பெக்டர்கள் பரமசாமி, ஜான்சன் ஆகியோர் விசாரணை நடத்தினர். விசாரணையில், அவர்கள் ராஜக்காபட்டியை சேர்ந்த ரமேஷ் (20), வேடப்பட்டியை சேர்ந்த வேளாங்கண்ணி (19), மாதவன் (22), பாரதிபுரத்தை சேர்ந்த பிரபு (19) என்பதும், அதிகாரிபட்டியில் மளிகை கடையில் திருடியதும் தெரியவந்தது. இதையடுத்து அவர்களிடம் இருந்த 7 பவுன் நகைகள், ரூ.4 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர்களை கைது செய்தனர்.