நீலகிரியில் 4 தாலுகா பள்ளிகளுக்கு நாளை விடுமுறை
|தென்மேற்கு பருவமழையையொட்டி நீலகிரி, கோவை மாவட்ட மலைப் பகுதிகளில் மழை வெளுத்து வாங்குகிறது.
நீலகிரி,
தென்மேற்கு பருவமழை மேலும் தீவிரம் அடைந்துள்ளது. தமிழ்நாட்டில் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய பகுதிகளில் மழை பெய்து வருகிறது. அதிலும் குறிப்பாக நீலகிரி, கோவை மாவட்ட மலைப் பகுதிகளில் மழை வெளுத்து வாங்குகிறது. கடந்த 3 நாட்களில் மட்டும் அவலாஞ்சியில் 91 செ.மீ. மழை கொட்டியிருக்கிறது.
இந்த நிலையில் மத்திய மேற்கு மற்றும் அதனையொட்டிய வடமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு பகுதி நேற்று உருவாகியுள்ளது. இது மேலும் வலுப்பெற்று ஒடிசா கடற்கரையை நோக்கி 2 நாட்களில் நகரக்கூடும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இதனால் தமிழ்நாட்டில் மழைக்கான வாய்ப்பு குறைவு என்றாலும், மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக நீலகிரி மாவட்டத்தில் கன முதல் மிக கனமழை வரை பெய்யக்கூடும். இதனால் இந்த பகுதிகளுக்கு மீண்டும் 'ஆரஞ்சு' எச்சரிக்கை நிர்வாக ரீதியாக வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ளது.
இந்தநிலையில், கனமழை காரணமாக நீலகிரியில் உள்ள 4 தாலுகாவில் உள்ள (உதகை, குந்தா, கூடலூர், பந்தலூர்) பள்ளிகளுக்கு மட்டும் நாளை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. கனமழை காரணமாக நீலகிரியில் 4 தாலுகா பள்ளிகளுக்கு நாளை விடுமுறை அளித்து மாவட்ட கலெக்டர் லட்சுமி பவ்யா உத்தரவிட்டுள்ளார்.