< Back
மாநில செய்திகள்
பிரபல ரவுடி கொலை வழக்கில் கொலையாளிகளை விரைந்து பிடிக்க 4 தனிப்படை
காஞ்சிபுரம்
மாநில செய்திகள்

பிரபல ரவுடி கொலை வழக்கில் கொலையாளிகளை விரைந்து பிடிக்க 4 தனிப்படை

தினத்தந்தி
|
7 Sept 2023 2:13 PM IST

பிரபல ரவுடி கொலை வழக்கில் கொலையாளிகளை விரைந்து பிடிக்க 4 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.

கொலை

திருவள்ளூர் மாவட்டம் திருமழிசை பகுதியை சேர்ந்தவர் எபினேசர் (வயது 32). இவர் மீது கொலை, கொலைமிரட்டல், அடிதடி, ஆள் கடத்தல் உள்ளிட்ட 15-க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன. இவர் அந்த பகுதியில் பிரபல ரவுடியாக வலம் வந்தார். நேற்று முன்தினம் இரவு ஸ்ரீபெரும்புதூர்-அரக்கோணம் சாலையில் எபினேசர் ஆட்டோவில் சென்று கொண்டிருந்தார். ஸ்ரீபெரும்புதூர் அருகே மண்ணுர் என்னும் இடத்தில் ஆட்டோ வந்தபோது காரில் வந்த மர்ம நபர்கள் ஆட்டோ மீது மோதினர். தன்னை தாக்க வருவதை உணர்ந்த எபினேசர் ஆட்டோவில் இருந்து இறங்கி அருகே வயல்வெளியில் தப்பி ஓடினார். அந்த மர்ம கும்பல் எபினேசர் மீது 2 நாட்டு வெடிகுண்டுகளை வீசினர்.

இதில் நிலைதடுமாறி கீழே விழுந்த எபினேசரை மர்ம கும்பல் வெறி கொண்டு விரட்டி சென்று அரிவாளால் சரமாரியாக தலையில் வெட்டினர். இதில் எபினேசர் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

4 தனிப்படை

இதையடுத்து மர்ம கும்பல் அங்கிருந்து தப்பிச்சென்றது. இதுகுறித்து தகவல் அறிந்த ஸ்ரீபெரும்புதூர் துணை போலீஸ் சூப்பரண்டு சந்திரதாசன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று எபினேசர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஸ்ரீபெரும்புதூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

கொலை செய்தது யார்? கொலைக்கான காரணம் என்ன? பழிக்கு பழியா? அல்லது தொழில் போட்டியா? என பல கோணங்களில் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். போலீசாரின் முதற் கட்ட விசாரணையில் கடந்த 2020-ம் ஆண்டு திருமழிசை பகுதியில் ஆனந்தன் என்பவர் படுகொலை செய்யப்பட்டார்.

இந்த வழக்கில் எபினேசர் முக்கிய குற்றவாளியாக கருதப்பட்டார். இந்த கொலைக்கு பழிக்குப்பழியாக எபினேசர் கொலை செய்யப்பட்டாரா? என போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். கொலையாளிகளை விரைந்து பிடிக்க காஞ்சீபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுதாகர் உத்தரவின் பேரில் ஸ்ரீபெரும்புதூர் துணை போலீஸ் சூப்பிரண்டு சந்திரதாசன் தலைமையில் 4 தனிப்படை அமைக்கப்பட்டு தேடுதல் வேட்டை தொடங்கி உள்ளது.

தொழில்போட்டி

போலீஸ் விசாரணையில் திருமழிசை பகுதியில் பிரபல ரவுடி ஒருவருக்கும், கொலையுண்ட எபினேசருக்கும் அந்த பகுதியில் தொழிற்சாலையில் இரும்பு கழிவு எடுக்கும் தொழில் போட்டி இருந்து உள்ளது. இதனால் இருதரப்பினருக்கும் அடிக்கடி மோதல் ஏற்பட்டுள்ளது. இதில் இருதரப்பிலும், கடந்த சில மாதங்களுக்கு முன் கிரிஸ்டோபர், ஸ்டீபன்ராஜ் இருவரும் கொலை செய்யப்பட்டுள்ளனர். இருவரில் யார் பெரியவர் என போட்டி வலுத்து வந்தது.

இந்த நிலையில் எபினேசருக்கு போட்டியாக இருந்த ரவுடி தலைமறைவாகி உள்ளதால் அவர் மீது போலீசாருக்கு சந்தேகம் வலுத்துள்ளது. தனிப்படை போலீசார் சென்னை, காஞ்சீபுரம், வேலூர், பெங்களூரு உள்ளிட்ட பகுதியில் கொலையாளிகளை பிடிக்க விரைந்துள்ளனர்.

மேலும் செய்திகள்