ஈரோடு
ஈரோட்டில் கெட்டுப்போன மீன்களை விற்பனைக்கு வைத்திருந்த 4 கடைகளுக்கு அபராதம்
|ஈரோட்டில் கெட்டுப்போன மீன்களை விற்பனைக்கு வைத்திருந்த 4 கடைகளுக்கு அபராதம்
ஈரோட்டில் கெட்டுப்போன மீன்களை விற்பனைக்கு வைத்திருந்த 4 கடைகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
அதிகாரிகள் சோதனை
தமிழக அரசின் உணவு பாதுகாப்புத்துறை ஆணையம் மற்றும் மீன்வளம், மீனவர் நலத்துறை ஆணையகம் இணைந்து, மீன் மார்க்கெட்டுகளில் சோதனை செய்து நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டு இருந்தது. அதன்படி ஈரோடு மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் நேற்று அதிகாரிகள் சோதனை செய்தனர்.
ஈரோடு மாநகராட்சிக்குட்பட்ட ஸ்டோனி பாலம் பகுதியில் செயல்பட்டு வரும் மீன் மார்க்கெட்டில் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் செல்வன், அருண்குமார், மீன்வளத்துறை ஆய்வாளர் சசிகலா, உதவி ஆய்வாளர் சுந்தரமூர்த்தி ஆகியோர் கொண்ட குழுவினர் 20-க்கும் மேற்பட்ட மீன் கடைகளில் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது 4 கடைகளில் கெட்டுப்போன மீன் வகைகள் பொதுமக்களுக்கு விற்பனை செய்வதற்காக இருப்பு வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
4 கடைகளுக்கு அபராதம்
இதைத்தொடர்ந்து கெட்டுப்போன நிலையில் இருந்த 12 கிலோ மீன்களை அதிகாரிகள் பறிமுதல் செய்து முறைப்படி மருந்து தெளித்து அழித்தனர். மேலும் சம்மந்தப்பட்ட 4 கடைகளுக்கு தலா ரூ.1,000 அபராதம் விதித்தனர்.
இதுகுறித்து மாவட்ட நியமன அலுவலர் டாக்டர் தங்கவிக்னேஷ் கூறும்போது 'மீன்களை சுகாதாரமான முறையில் சேமித்து வைக்கவும், விற்பனை செய்யவும் வியாபாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது. மேலும் உணவு பாதுகாப்பு உரிமம் பெறாமல் இறைச்சி மற்றும் மீன் கடைகள் செயல்படக்கூடாது என்றும் உத்தரவிடப்பட்டு உள்ளது' என்றார்.