தங்கும் விடுதியில் 17 வயது சிறுமியை பலாத்காரம் செய்த 4 பேர் - கடலூரில் பரபரப்பு
|போலீசார் விசாரணையில் சிறுமியை பெண் ஒருவர் விபசாரத்தில் ஈடுபடுத்தியது தெரியவந்தது.
கடலூர்,
கடலூர் மாவட்டம் ராமநத்தம் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள ஒரு கட்டிடத்தில் தனியார் பாருடன் செயல்படும் தங்கும் விடுதியில் விபசாரம் நடைபெறுவதாக திட்டக்குடி துணை போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்துக்கு நேற்று ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் துணை போலீஸ் சூப்பிரண்டு மோகன் தலைமையிலான போலீசார், அந்த தங்கும் விடுதிக்கு விரைந்து வந்து அதிரடி சோதனை நடத்தினர்.
அப்போது 17 வயது சிறுமியுடன் 4 ஆண்கள் உல்லாசத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து போலீசார், சிறுமியை மீட்டதுடன், 4 பேரை மடக்கி பிடிக்க முயன்றனர். அப்போது 3 பேர் மட்டும் பிடிபட்டனர். ஒருவர் தப்பியோடி விட்டார். மீட்கப்பட்ட சிறுமியிடம் நடத்திய விசாரணையில், அந்த சிறுமி பண்ருட்டியை சேர்ந்தவர் என்பதும், அவரை திவ்யா (வயது 27) என்ற பெண், உறவினர் வீட்டுக்கு அழைத்துச் செல்வதாக கூறி தங்கும் விடுதிக்கு அழைத்து வந்து விபசாரத்தில் ஈடுபடுத்தியதும் தெரியவந்தது.
இதையடுத்து பிடிபட்ட 3 பேரிடமும் நடத்திய விசாரணையில், அவர்கள் பெரம்பலூர் மாவட்டம் குன்னம் அடுத்த அயன்பேரியூர் கிராமத்தை சேர்ந்த சுப்பிரமணியன் மகன் கார்த்திக் (29), குன்னம் அடுத்த நம்மையூர் கிராமத்தை சேர்ந்த வேலாயுதம் மகன் சேகர் (47), பெரம்பலூர் மாவட்டம் செங்குணத்தை சேர்ந்த முத்துசாமி மகன் சக்திவேல் (27) உள்ளிட்ட 4 பேரும் சேர்ந்து சிறுமியை வலுக்கட்டாயமாக பலாத்காரம் செய்ததும் தெரியவந்தது.
மேலும் தப்பியோடியவர் பொயணப்பாடியை சேர்ந்த வெங்கடேசன் மகன் ஜெயபால்(47) என்பதும் தெரியவந்தது. இதையடுத்து ராமநத்தம் போலீசார், போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து சிறுமியை விபசாரத்தில் ஈடுபடுத்திய திவ்யா, கார்த்திக், சேகர் மற்றும் சக்திவேல் ஆகியோரை கைது செய்தனர். தப்பியோடிய ஜெயபாலை வலைவீசி தேடி வருகிறார்கள்.