< Back
மாநில செய்திகள்
இரு தரப்பினரிடையே ஏற்பட்ட மோதலில் 4 பேருக்கு அரிவாள் வெட்டு - 5 பேர் கைது
திருவள்ளூர்
மாநில செய்திகள்

இரு தரப்பினரிடையே ஏற்பட்ட மோதலில் 4 பேருக்கு அரிவாள் வெட்டு - 5 பேர் கைது

தினத்தந்தி
|
11 May 2023 1:30 PM IST

இரு தரப்பினரிடையே ஏற்பட்ட மோதலில் 4 பேருக்கு சரமாரி அரிவாள் வெட்டு விழுந்தது. இந்த வழக்கில் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் அம்பேத்கர் நகர் பகுதியைச் சேர்ந்தவர் தினேஷ்குமார் என்கிற காசி (வயது 23). அரக்கோணம் மார்க்கெட்டில் மூட்டை தூக்கும் கூலி தொழிலாளி. கடந்த 8-ந் தேதி ஜாத்திரை திருவிழாவிற்காக கார்த்திகேயபுரம் கிராமத்தில் உள்ள அத்தை அமுல் வீட்டிற்கு தினேஷ்குமார், இவரது அண்ணன் அபினேஷ் (25), மற்றும் திருவாலங்காட்டை சேர்ந்த மாமா உமாபதி ஆகியோருடன் சென்றார்.

நேற்று முன்தினம் காலை தினேஷ்குமார், உமாபதி இருவரும் திருத்தணி அரக்கோணம் சாலையில் உள்ள டாஸ்மாக் கடை அருகே நின்று கொண்டிருந்தனர். அப்போது அங்கு நின்று கொண்டிருந்த ஒரு வண்டியில் வைத்திருந்த பெட்ரோலை, கார்த்திகேயபுரம் கிராமத்தைச் சேர்ந்த கோபி என்பவர் எடுத்ததாக தெரிகிறது. இதுகுறித்து வண்டி உரிமையாளரிடம் கார்த்திேகயபுரத்தை சேர்ந்த கோபி என்பவர் எடுத்ததாக உமாபதி சொன்னதால் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு பின்னர் அங்கிருந்து இருவரும் வீட்டுக்கு சென்றனர்.

இதனால் அத்திரமடைந்த கோபி, மருமகன் கணபதி மற்றும் ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த உறவினர்கள் 3 பேருடன் சேர்ந்து தினேஷ்குமாரின் அத்தை அமுலு வீட்டுக்கு சென்று தகராறில் ஈடுபட்டனர். அப்போது இருதரப்பினரிடையே ஏற்பட்ட மோதலில் தினேஷ்குமார் அவரது அண்ணன் அபினேஷ், அத்தை மகன்கள் அருண்குமார், ராம் ஆகியோரை கோபி மற்றும் அவருடன் வந்தவர்கள் அரிவாளால் வெட்டினர்.

இதில் 4 பேருக்கும் படுகாயம் ஏற்பட்டது. படுகாயம் அடைந்த 4 பேரையும் அருகில் இருந்தவர்கள் மீட்டு திருத்தணி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதுகுறித்து தினேஷ்குமார் அளித்த புகாரின் பேரில் கார்த்திகேயபுரம் கிராமத்தைச் சேர்ந்த கோபி (48), கணபதி (24), ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தை சேர்ந்த ராஜேஷ் (24), அல்லா பாகேஷ் (34), சையத் முஸ்தபா (24) ஆகிய 5 பேரையும் திருத்தணி போலீசார் கைது செய்து கோர்ட்டில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.

மேலும் செய்திகள்