< Back
மாநில செய்திகள்
காட்டுப்பன்றி இறைச்சி விற்ற 4 பேர் கைது
திருவண்ணாமலை
மாநில செய்திகள்

காட்டுப்பன்றி இறைச்சி விற்ற 4 பேர் கைது

தினத்தந்தி
|
26 Jan 2023 10:33 PM IST

காட்டுப்பன்றி இறைச்சி விற்ற 4 பேர் கைது செய்யப்பட்டனர்.

திருவண்ணாமலை வனச்சரகத்திற்கு உட்பட்ட அல்லிகொண்டாபட்டு கிராமம் மற்றும் ஆவூர் அருகே இருக்கும் அணுக்குமலை ஆகிய கிராமங்களில் காட்டுப் பன்றியை வேட்டையாடி இறைச்சியை விற்பனை செய்து வருவதாக வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.

அதன்பேரில் மாவட்ட வன அலுவலர் அருண்லால் அறிவுரையின்படி திருவண்ணாமலை வனச்சரக அலுவலர் சீனிவாசன் மற்றும் வனக்காப்பாளர்கள் முகமது, சுல்தான், சிரஞ்சீவி உள்ளிட்ட வனத்துறையினர் கொண்ட குழுவினர் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

2 கிராமங்களில் சந்தேகத்திற்கு இடம் அளிக்கும் வகையில் நின்றிருந்த 4 பேரை பிடித்து வனத்துறையினர் விசாரணை செய்தனர். அப்போது அவர்கள் முன்னுக்குப்பின் முரணாக பதில் தெரிவித்தனர்.

இதனால் சந்தேகம் அடைந்த வனத்துறையினர் அவர்களை சோதனை செய்தபோது அவர்களிடம் காட்டுப்பன்றி இறைச்சி இருந்ததும், அதை விற்பனைக்காக கொண்டு சென்றதும் தெரிய வந்தது.

விசாரணையில் அவர்கள் அல்லிகொண்டாபட்டு இருதயபுரத்தை சேர்ந்த டோமிக் சேவியர் (வயது 20), மரியசூசை (42), தெய்வாநத்தம் அருகே அணுக்குமலையை சேர்ந்த பழனி (44), ராஜீவ்காந்தி (37) ஆகியோர் என்பது தெரியவந்தது.

அவர்களை வனத்துறையினர் கைது செய்து அவர்களிடமிருந்து சுமார் 40 கிலோ இறைச்சியை பறிமுதல் செய்து அழித்தனர். 4 பேருக்கு ரூ.1¼ லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது.

மேலும் செய்திகள்