செங்கல்பட்டு
திருட்டுத்தனமாக மது விற்ற 4 பேர் கைது
|சிங்கப்பெருமாள் கோவில் அருகே திருட்டுத்தனமாக மது விற்ற 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
செங்கல்பட்டு மாவட்டம் சிங்கப்பெருமாள் கோவில் அருகே உள்ள பகத்சிங் நகர் பகுதியில் சுதந்திர தினத்தன்று திருட்டுத்தனமாக ஒரு வீட்டின் அருகே மதுபான பாட்டில் விற்பனை செய்யப்படுவதாக கூடுவாஞ்சேரி மதுவிலக்கு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனை தொடர்ந்து மதுவிலக்கு போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று நேரில் ஆய்வு செய்தபோது அங்கு திருத்தேரி பகத்சிங் பகுதியை சேர்ந்த அய்யப்பன் (வயது 34), என்பவர் திருட்டுத்தனமாக மது விற்று கொண்டிருப்பது தெரிய வந்தது. இதனையடுத்து போலீசார் அய்யப்பனை கைது செய்து அவரிடமிருந்து 90 மது பாட்டில்களை கைப்பற்றினர். இதே போல மறைமலைநகர் சிங்காரவேலு தெருவில் திருட்டுத்தனமாக மது விற்று கொண்டிருந்த சிங்கப்பெருமாள் கோவில் மண்டபத்தெருவை சேர்ந்த ராஜேஷ் ( 32) என்பவரை போலீசார் கைது செய்து அவரிடமிருந்து 37 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
கூடுவாஞ்சேரி சீனிவாசபுரம் அருகே திருட்டுத்தனமாக மது விற்று கொண்டிருந்த விழுப்புரத்தை சேர்ந்த செல்வம் (வயது 39) என்பவரை போலீசார் கைது செய்து அவரிடமிருந்து 12 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர். கூடுவாஞ்சேரி அடுத்த காவனூர் மெயின் ரோடு அருகே ஒரு பெட்டிக்கடையில் சுதந்திர தினத்தன்று திருட்டுத்தனமாக மது விற்று கொண்டிருந்த அதே பகுதியை சேர்ந்த ஜெயபாரதி (42) என்பவரை போலீசார் கைது செய்து அவரிடமிருந்து 50 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.