திண்டுக்கல்
செல்போன், துணிக்கடையில் பூட்டை உடைத்து திருடிய 4 பேர் கைது
|செல்போன் கடையில் திருட்டு
திண்டுக்கல் பென்சனர் தெருவை சேர்ந்தவர் கார்த்திக் (வயது 37). இவர், திண்டுக்கல்லில் பழனி சாலை பகுதியில் செல்போன் பழுதுபார்க்கும் கடை வைத்து உள்ளார். கடந்த 18-ந்தேதி இரவு கடையை வழக்கம் போல் பூட்டிவிட்டு வீட்டுக்கு சென்றுவிட்டார். மறுநாள் காலையில் மீண்டும் கடையை திறக்க சென்றபோது பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
மேலும் கடைக்குள் சென்று பார்த்த போது வாடிக்கையாளர்கள் பழுது பார்க்க கொடுத்து இருந்த 92 செல்போன்கள், மடிக்கணினி ஆகியவற்றை காணவில்லை. நள்ளிரவில் மர்ம நபர்கள் பூட்டை உடைத்து செல்போன்கள், மடிக்கணினியை திருடியது தெரியவந்தது.
4 பேர் கைது
இதுகுறித்து திண்டுக்கல் வடக்கு போலீஸ் நிலையத்தில் அவர் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். மேலும் இன்ஸ்பெக்டர் உலகநாதன் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர்கள் கார்த்திகேயன், வீரபாண்டியன், ஜார்ஜ் எட்வர்டு மற்றும் போலீசாரை கொண்ட தனிப்படையினர் விசாரணையில் இறங்கினர்.
மேலும் கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை கொண்டும் விசாரித்தனர். விசாரணையில் பேகம்பூரை சேர்ந்த முகமது மஸ்தான் (வயது 19), முகமது இத்ரிஸ் (19), சேக்பரீத் (20), அஸ்கர்முஜீப் (22) ஆகியோர் திருட்டில் ஈடுபட்டது தெரியவந்தது.
இதையடுத்து 4 பேரையும் தனிப்படை போலீசார் கைது செய்து விசாரித்தனர். விசாரணையில் செல்போன் பழுது பார்க்கும் கடை மட்டுமின்றி திண்டுக்கல்லில் ஒரு ஸ்டூடியோ மற்றும் துணிக்கடை ஆகியவற்றில் அவர்கள் திருடியதும் தெரியவந்தது. இதைத்தொடர்ந்து 92 செல்போன்கள், ஒரு மடிக்கணினி, 2 கேமராக்கள், பனியன்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.