< Back
மாநில செய்திகள்
ஆவடி அருகே ரவுடி கொலை வழக்கில் 4 பேர் எழும்பூர் கோர்ட்டில் சரண்
சென்னை
மாநில செய்திகள்

ஆவடி அருகே ரவுடி கொலை வழக்கில் 4 பேர் எழும்பூர் கோர்ட்டில் சரண்

தினத்தந்தி
|
14 Oct 2023 8:29 AM IST

ஆவடி அருகே ரவுடி கொலை வழக்கில் 4 பேர் எழும்பூர் கோர்ட்டில் சரண் அடைந்தனர்.

திருமுல்லைவாயல் அடுத்த அயப்பாக்கம் தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பை சேர்ந்தவர் சரண் என்ற பச்சைக்கிளி (வயது 21). ரவுடியான இவர், சென்னை ஜெ.ஜெ.நகர் பகுதியில் 2019-ம் ஆண்டு கண்ணதாசன் என்பவரை கொலை செய்த வழக்கில் கைதாகி ஜாமீனில் வெளியே வந்துள்ளார்.

நேற்று முன்தினம் காலை சரண், பூந்தமல்லி கோர்ட்டுக்கு விசாரணைக்கு வந்த தனது கூட்டாளிகளை பார்த்துவிட்டு நண்பர் சந்தோஷ் என்பவருடன் மோட்டார்சைக்கிளில் வீட்டுக்கு திரும்பி வந்து கொண்டிருந்தார். ஆவடி அருகே வந்தபோது, கோர்ட்டில் இருந்தே இவர்களை பின்தொடர்ந்து வந்த கும்பல் சரணை, ஓட ஓட விரட்டி சரமாரியாக வெட்டிக்கொன்றனர். அவரது நண்பர் தப்பி ஓடிவிட்டார். இதுகுறித்து திருமுல்லைவாயல் போலீசார் வழக்குப்பதிவு செய்து கொலையாளிகளை தேடி வந்தனர். இந்த நிலையில் நேற்று காலை சரணை கொலை செய்த வழக்கில் திருவேற்காடு பகுதியை சேர்ந்த புருஷோத்தமன் (30), பரங்கிமலையை சேர்ந்த குமரேசன் (30), காட்டுமன்னார் கோவில் பகுதியை சேர்ந்த பிரவீன் (20), தஞ்சாவூரை சேர்ந்த விவேக் (28) ஆகிய 4 பேர் சென்னை எழும்பூர் 13-வது கோர்ட்டில் நீதிபதி சக்திவேல் முன்னிலையில் சரண் அடைந்தனர். அவர்களை சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார்.

சரண் அடைந்த 4 பேரையும் காவலில் எடுத்து விசாரிக்க திருமுல்லைவாயல் போலீசார் முடிவு செய்துள்ளனர். அதன்பிறகுதான் சரண் கொலைக்கான முழுமையான காரணம் தெரியவரும் என போலீசார் தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்