மயிலாடுதுறை
வன்முறையில் ஈடுபட்ட 4 பேர் குண்டர் சட்டத்தில் கைது
|கொள்ளிடம் அருகே வன்முறையில் ஈடுபட்ட 4 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கொள்ளிடம்:
திருவிழாவில் தகராறு
மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே கடவாசல் காந்தி நகரில் கடந்த செப்டம்பர் மாதம் 10-ந் தேதி அங்குள்ள கன்னி கோவில் திருவிழாவை முன்னிட்டு வள்ளி திருமணம் நாடகம் நடைபெற்றது. அப்போது கடவாசல் மற்றும் வடகால் ஆகிய இரு கிராம இளைஞர்கள் இடையே வாய் தகராறு ஏற்பட்டு ஒருவரை ஒருவர் மண்வெட்டி கடப்பாரை இரும்பு பைப்பு உள்ளிட்ட ஆயுதங்களை கொண்டு தாக்கிக் கொண்டனர்.
இதில் பலத்த காயமடைந்த 8 பேர் சிதம்பரம் ராஜா முத்தையா அரசு மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்றனர். இந்தநிலையில் போலீசார் இரு தரப்பினர் மீதும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
குண்டர் சட்டத்தில் கைது
இந்நிலையில் மாவட்ட கலெக்டர் மகாபாரதி உத்தரவின் பேரிலும், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மீனா மற்றும் சீர்காழி துணை சூப்பிரண்டு போலீஸ் லாமேக் பரிந்துரையின் பேரிலும் புதுப்பட்டினம் இன்ஸ்பெக்டர் கலைச்செல்வி மற்றும் போலீசார் குண்டர் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து, வன்முறையில் ஈடுபட்ட கடவாசல் காந்தி நகரைச் சேர்ந்த நாகராஜன் மகன் ராஜராஜன்(32),பாலையா மகன் பாக்யராஜ்(22) ஆகிய இருவரையும் கைது செய்து நேற்று திருச்சி சிறையில் அடைத்தனர்.
இதேபோல் மற்றொரு தரப்பை சேர்ந்த வடகால் கிராமம் மாரியப்பன் மகன் மணிமாறன் (23), பாலகிருஷ்ணன் மகன் விக்னேஷ் (25) ஆகிய இருவருக்கும் ஒரு வருட சிறை தண்டனையாக குண்டர் சட்டத்தில் கைது செய்து புதுக்கோட்டை சிறையில் அடைத்தனர். வன்முறையில் ஈடுபட்ட 4 பேரை ஒரே நாளில் புதுப்பட்டினம் போலீசார் குண்டர் சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.