< Back
மாநில செய்திகள்
போதை ஊசி, மருந்துகள் விற்ற தலைமை ஆசிரியரின் மகன் உள்பட 4 பேர் கைது
விழுப்புரம்
மாநில செய்திகள்

போதை ஊசி, மருந்துகள் விற்ற தலைமை ஆசிரியரின் மகன் உள்பட 4 பேர் கைது

தினத்தந்தி
|
11 April 2023 12:15 AM IST

திண்டிவனத்தில் போதை ஊசி, மருந்துகள் விற்ற தலைமை ஆசிரியரின் மகன் உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர்.

திண்டிவனம்:

திண்டிவனத்தில் கடந்த 8-ந்தேதி ஆன்லைன் மூலம் போதை ஊசிகள், மருந்துகள் வாங்கி விற்பனை செய்ததாக 3 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் சிலர் ஒரு வீட்டில் போதை ஊசி, மருந்துகள் பதுக்கி வைத்து விற்பனை செய்வதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

அதன்படி திண்டிவனம் ஜெயபுரம் கர்ணாவூர் பேட்டையை சேர்ந்த ஏழுமலை மகன் சிவகுரு (வயது 20) என்பவரது வீட்டில் நேற்று அதிரடி சோதனை நடத்தினர். அப்போது அங்கு சிவகுருடன் மேலும் 3 பேர் போதை ஊசிகள், மருந்துகளுடன் இருந்தனர்.

4 பேர் கைது

இதையடுத்து சிவகுரு, திண்டிவனம் கோபால் தெருவை சேர்ந்த அரசு பள்ளி தலைமை ஆசிரியர் கண்ணதாசன் மகன் நித்தீஷ் (22), மன்னார்சாமி கோவில் தெருவை சேர்ந்த ஞானசேகர் மகன் பிரவீன்ராஜ் (25), வானூர் அருகே உள்ள குன்னம் கிராமத்தை சேர்ந்த சிவஞானசக்தி மகன் கோபிநாத் ஆகிய 4 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்த 74 போதை மாத்திரைகள், போதை ஊசிகள், கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

இவர்கள் ஆன்லைன் மூலம் போதை ஊசிகள், மருந்துகள் வாங்கி பயன்படுத்தியதோடு, விற்பனை செய்து வந்ததும் போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.

மேலும் செய்திகள்