சென்னை
சேலையூரில் வீடு புகுந்து ரியல் எஸ்டேட் அதிபர், மனைவி, மகள் உள்பட 4 பேருக்கு அரிவாள் வெட்டு
|சேலையூரில் வீடு புகுந்து ரியல் எஸ்டேட் அதிபர், மனைவி, மகள் உள்பட 4 பேரை அரிவாளால் வெட்டிய ரவுடியை போலீசார் தேடி வருகின்றனர்.
சென்னை தாம்பரம் அடுத்த சேலையூர், சாந்தா நகர், முதல் குறுக்கு தெருவை சேர்ந்தவர் சங்கர்(வயது 55). ரியல் எஸ்டேட் அதிபரான இவர், நேற்று முன்தினம் இரவு அதே பகுதியில் உள்ள தனது சகோதரர் மாணிக்கம் வீட்டுக்கு சென்றுவிட்டு இருசக்கர வாகனத்தில் வீட்டுக்கு திரும்பினார்.
வீட்டின் வெளியே வாகனத்தை நிறுத்தி விட்டு உள்ளே சென்றபோது, மர்ம நபர்கள் 2 பேர் அவரை பின்தொடர்ந்து வந்ததை கவனித்தார். அவர்கள் கையில் அரிவாள் வைத்திருந்ததை கவனித்த சங்கர், வீட்டுக்குள் சென்று குடும்பத்தினரை எழுப்பினார்.
ஆனால் அதற்குள் வீட்டுக்்குள் புகுந்த மர்ம நபர்கள், சங்கரின் கை தோள்பட்டையில் வெட்டினர். இதனை தடுக்க முயன்ற சங்கரின் தாய் குஞ்சாராம்(72), மனைவி பேபி(49), மகள் ராஜேஸ்வரி(28) ஆகிய 3 பேருக்கும் கையில் வெட்டு விழுந்தது. அவர்களின் அலறல் சத்தம் கேட்டு, அப்பகுதி மக்கள் ஓடி வந்தனர்.
இதைபார்த்ததும் மர்ம நபர்கள், வாகனத்தை அங்கேயே விட்டு விட்டு தப்பி ஓடிவிட்டனர். இதுபற்றி தகவல் அறிந்து வந்த சேலையூர் போலீசார் வெட்டு காயமடைந்த 4 பேரையும் மீட்டு, குரோம்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பினர்.
அங்கு, சங்கரும், அவரது தாய் குஞ்சாரமும் முதலுதவி சிகிச்சை பெற்று வீடு திரும்பினர். மனைவி, மகள் இருவரும் மேல் சிகிச்சைக்காக சென்னை அரசு பொது ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர்.
விசாரணையில், சங்கர் மற்றும் அவரது குடும்பத்தினரை வெட்டியது சேலையூர், எம்.ஜி.ஆர். நகரை சேர்ந்த சரித்திர பதிவேடு ரவுடியான ராஜசேகர்(28) என்பதும், தனது நண்பருடன் சேர்ந்து இந்த வெறிச்செயலில் ஈடுபட்டதும் தெரிந்தது.
அப்பகுதியில் ரவுடிகள் நடமாட்டம் குறித்து, சேலையூர் போலீஸ் நிலையத்துக்கு, சங்கர், அவ்வப்போது தகவல் கொடுத்து வந்ததும், அதன் காரணமாகவே சங்கரை வெட்டியதும் தெரியவந்தது. இது குறித்து சேலையூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவான ரவுடி ராஜசேகர் உள்ளிட்ட இருவரை தேடி வருகின்றனர்.