திருப்பூர்
பெண் உள்பட 4 பேருக்கு அரிவாள் வெட்டு விழுந்தது.
|பல்லடம் அருகே பெண் உள்பட 4 பேருக்கு அரிவாள் வெட்டு விழுந்தது. இது குறித்து போலீசார் விசாரித்து வருகிறார்கள்.
பல்லடம்,
பல்லடம் அருகே பெண் உள்பட 4 பேருக்கு அரிவாள் வெட்டு விழுந்தது. இது குறித்து போலீசார் விசாரித்து வருகிறார்கள்.
இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
அரிவாள் வெட்டு
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியை சேர்ந்தவர் மாரீஸ்வரி. இவர் தனது முதல் கணவரை விட்டு பிரிந்து கணேசமூர்த்தி என்பவருடன் திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே குப்புசாமி நாயுடுபுரத்தில் சாலையோரமாக தள்ளுவண்டி கடை போட்டு பலகாரம் தயாரித்து விற்பனை செய்து வந்தார். இந்த நிலையில் நேற்று மாலை வழக்கம்போல் தள்ளு வண்டி கடையில் இருவரும் பலகாரம் சுட்டு வியாபாரம் செய்து கொண்டிருந்தனர்.
அப்போது அங்கு வந்த மாரீஸ்வரியின் முதல் கணவர் மகன் புஷ்பராஜ் (வயது 30) என்பவர் திடீரென்று தான் மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்து மாரீஸ்வரியையும், கணேச மூர்த்தியையும் வெட்டினார். இதனால் அவர்கள் 2 பேரும் அலறி துடித்தனர். இதனைப் பார்த்த பொது மக்கள் அங்கிருந்து சிதறி ஓடினர்.
அப்போது தள்ளுவண்டி கடை அருகே நின்று கொண்டிருந்த கணேச மூர்த்தியின் தம்பி ரமேஷ் ஓடிவந்து புஷ்பராஜை தடுத்து அவரிடம் இருந்து அரிவாளை பிடுங்கினார். அப்போது இருவரும் ஒருவரையொருவர் வெட்டிக்கொண்டனர்.
போலீசார் விசாரணை
இந்த சம்பவத்தில் மாரீஸ்வரி, கணேசமூர்த்தி, ரமேஷ் மற்றும் புஷ்பராஜ் ஆகிய 4 பேருக்கும் உடலில் பல இடங்களில் வெட்டு காயங்கள் ஏற்பட்டது. இது குறித்து தகவல் அறிந்த பல்லடம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அரிவாளை பறிமுதல் செய்து 4 பேரையும் மீட்டு பல்லடம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு முதலுதவி பெற்று மேல் சிகிச்சைக்காக திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதில் மாரீஸ்வரி உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.
இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை செய்தனர். விசாணையில் மாரீஸ்வரி, கணேசமூர்த்தி என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு பல்லடத்தில் வசிப்பது புஷ்பராஜிக்கு தெரிய வந்தது. இதனால் ஆத்திரத்தில் அவர்களை புஷ்பராஜ் அரிவாளால் வெட்டியது தெரியவந்தது.இந்த சம்பவம் அந்தபகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
-