திருவள்ளூர்
வேனை வழிமறித்து திருட்டில் ஈடுபட்ட 3 சிறுவர்கள் உள்பட 4 பேர் கைது
|வேனை வழிமறித்து திருட்டில் ஈடுபட்ட 3 சிறுவர்கள் உள்பட 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
திருவள்ளூர் மாவட்டம், வெங்கல் அருகே உள்ள குருவாயல் கிராமத்தில் முருகன் கோவிலில் நேற்று முன்தினம் நிச்சயதார்த்த நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றது. இதற்கு ஆவடி பாலவேடு கிராமம், கர்ணன் தெருவை சேர்ந்த வியாபாரி தினேஷ்பாபு (வயது 36) என்பவர் பந்தல் மற்றும் சவுண்ட் சர்வீஸ் அமைத்திருந்தார். இந்த நிலையில், அவர் நிகழ்ச்சி முடிந்த பின்னர் அனைத்தையும் அவிழ்த்து வேனில் ஏற்றிக்கொண்டு குருவாயல்-காரணி கூட்ரோடு சாலையில் சென்று கொண்டிருந்தபோது 2 மோட்டார் சைக்கிளில் வந்த 4 பேர் வேனை திடீரென வழிமறித்தனர். கண்ணிமைக்கும் நேரத்தில் அவர்கள் தினேஷ்பாபுவை சரமாரியாக தாக்கி அவரிடம் இருந்த செல்போன் மற்றும் ரொக்க பணத்தை பறித்து கொண்டு மோட்டார் சைக்கிள்களில் தப்பி சென்றனர்.
சம்பவம் குறித்து தினேஷ்பாபு வெங்கல் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். போலீஸ் இன்ஸ்பெக்டர் தர்மலிங்கம் தலைமையில் போலீசார் இந்த வழிப்பறி சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து குற்றவாளிகளை வலைவீசி தேடி வந்தனர். இந்தநிலையில், வழக்கு தொடர்பாக செங்குன்றம், நாவலூர் பகுதியைச் சேர்ந்த மகேஷ் (வயது 26), மற்றும் 18 வயதிற்கு உட்பட்ட சிறுவர்கள் உள்பட 4 பேரை போலீசார் பிடித்து விசாரித்தனர். அப்போது அந்த 4 வாலிபர்களும் வேனை வழிமறித்து செல்போன் மற்றும் ரொக்கப்பணத்தை கொள்ளையடித்து சென்றதை ஒப்புக்கொண்டனர். மேலும், அவர்கள் பயன்படுத்திய மோட்டார் சைக்கிள்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர். இதையடுத்து அவர்கள் திருவள்ளூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டனர்.