சென்னை
குன்றத்தூரில் இறைச்சி வியாபாரியை அரிவாளால் வெட்டிய வழக்கில் 4 பேர் தாம்பரம் கோர்ட்டில் சரண்
|குன்றத்தூரில் இறைச்சி வியாபாரியை அரிவாளால் வெட்டிய வழக்கில் 4 பேர் தாம்பரம் கோர்ட்டில் சரணடைந்தனர்.
குன்றத்தூர், மேத்தா நகரை சேர்ந்தவர் பத்மகுரு (வயது 38). இவர், குன்றத்தூர் முருகன் கோவில் செல்லும் சாலையில் கோழி இறைச்சி கடை வைத்து நடத்தி வருகிறார். கடந்த 4-ந்தேதி இரவு வழக்கம் போல் கடைக்கு வெளியே பத்மகுரு சிக்கன் பக்கோடா விற்பனை செய்து கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த 4 பேர் கொண்ட கும்பல் அரிவாளால் பத்மகுரு மீது கொலைவெறி தாக்குதல் நடத்தி விட்டு அங்கிருந்து தப்பி சென்றனர். படுகாயம் அடைந்த பத்மகுரு உயிருக்கு ஆபத்தான நிலையில் தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து குன்றத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பியோடிய கும்பலை வலைவீசி தேடி வந்தனர்.
இந்த நிலையில் நேற்று மாலை பத்மகுருவை அரிவாளால் வெட்டியது தாங்கள் தான் என்று கூறி பூந்தமல்லி அடுத்த திருமழிசை, பட்டேல் தெருவை சேர்ந்த முத்துக்குமார் (23), பார்த்திபன் (23), ஜெயபால் (23), பிரசாந்த் (24) ஆகிய 4 பேர் தாம்பரம் குற்றவியல் நீதிமன்றத்தில் நீதிபதி வர்ஷா முன்னிலையில் சரண் அடைந்தனர். அவர்களை புழல் சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார். குன்றத்தூர் போலீசார் அவர்களை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க உள்ளனர். போலீசாரின் விசாரணைக்கு பிறகே கொலை முயற்சிக்கான காரணம் தெரியவரும் என போலீசார் தெரிவித்தனர்.