சென்னை ஈ.சி.ஆர். அருகே கடலில் குளிக்கச் சென்ற 4 பேர் உயிரிழப்பு
|கடலில் மாயமான 4 பேரின் உடல்கள் தற்போது கரை ஒதுங்கியுள்ளன.
சென்னை,
சென்னை தி.நகர் பகுதியை சேர்ந்தவர் சிவதாணு. இவர் தனது மகள் நிவேதிதா மற்றும் குடும்ப நண்பர்களான சென்னை திருவல்லிக்கேணியை சேர்ந்த பிரசாத், துரைப்பாக்கத்தை சேர்ந்த மானஸ், திண்டுக்கல்லை சேர்ந்த நவீன் ஆகியோருடன் விடுமுறையை கழிப்பதற்காக கானத்தூர் பகுதியில் விடுதி எடுத்து தங்கியுள்ளார்.
கடற்கரைக்கு அருகே விடுதி இருந்ததால், சிவதாணு உள்ளிட்ட 5 பேரும் கடலில் குளிக்கச்சென்றுள்ளனர். அப்போது எழுந்த ராட்சத அலையில் ஒருவர் சிக்கிக்கொள்ள, அவரை மீட்கச்சென்ற மற்ற 3 பேரும் ராட்சத அலையில் சிக்கி கடலில் மாயமாகினர். இது குறித்த தகவலில் பேரில் போலீசார், கடலில் மாயமானவர்களை தேடி வந்தனர்.
இந்த நிலையில், கடலில் மாயமான சிவதாணு உள்ளிட்ட 4 பேரின் உடல்கள் கரை ஒதுங்கியுள்ளன. இது தொடர்பாக போலீசார் விசாரித்து வருகின்றனர். ஒரே நேரத்தில் 4 பேர் கடலில் மாயமாகி, 4 பேரின் உடல்களும் கரை ஒதுங்கிய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.