கிருஷ்ணகிரி
வெவ்வேறு இடங்களில் 4 பேர் தற்கொலை
|ஓசூர்:-
வெவ்வேறு இடங்களில் 4 பேர் தற்கொலை செய்து கொண்டனர்.
மனைவியை பிரிந்தவர்
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே ஒன்னல்வாடி கங்கம்மா கோவில் தெரு நரசிம்மா நகரை சேர்ந்தவர் ஸ்ரீதர் (வயது 34), தொழிலாளி. இவருக்கும், இவருடைய மனைவிக்கும் இடையே பிரச்சினை ஏற்பட்டது. இதனால் இவருடைய மனைவி அவருடைய பெற்றோர் வீட்டிற்கு சென்று விட்டார். மனைவி பிரிந்த வேதனையில் இருந்த ஸ்ரீதர் உடலில் மண்எண்ணெய் ஊற்றி தீ வைத்து தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து ஓசூர் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
சூளகிரி தாலுகா பேரிகையை சேர்ந்தவர் தொட்டம்மாள் (79), இவர், கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு கீழே விழுந்தார். தலையில் பலத்த காயமடைந்த தொட்டம்மாள் மனநலம் பாதிக்கப்பட்டார். மன வருத்தத்தில் இருந்த அவர், மடிவாளம் அருகே ஏரியில் குதித்து தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து பேரிகை போலீசார் விசாரணை நடத்தினர்.
இளம்பெண்
ஓசூர் பார்வதி நகரை சேர்ந்த சேதுபதி மனைவி சத்யா (29). இந்த தம்பதிக்கு குழந்தைகள் இல்லை. குடும்ப பிரச்சினை காரணமாக மனமுடைந்த சத்யா வீட்டில் உடலில் மண்எண்ணெய் ஊற்றி தீ வைத்துக் கொண்டார். பலத்த காயமடைந்த அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக ஓசூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
பிறகு மேல் சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி சத்யா இறந்து விட்டார். இது குறித்து ஓசூர் டவுன் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கணவன்- மனைவி தகராறு
ஓசூர் ஜி.கே.எஸ். நகரை சேர்ந்தவர் வெங்கடேஷ். இவரது மனைவி உமா (49). இவர் தன்னுடைய கணவரிடம் வங்கியில் அடகு வைத்த நகைகளை மீட்டு தருமாறு கேட்டார். அதுதொடர்பாக ஏற்பட்ட தகராறில் கணவன்- மனைவி இடையே தகராறு ஏற்பட்டது. இதில் மனம் உடைந்த உமா வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து மத்திகிரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.