செங்கல்பட்டு
விபத்தில் சிக்கிய வாகனத்தை திருடிய 4 பேர் கைது
|மறைமலைநகர் அருகே விபத்தில் சிக்கிய வாகனத்தை திருடிய 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
செங்கல்பட்டு மாவட்டம் சிங்கப்பெருமாள் கோவில் பகுதியை சேர்ந்தவர் ரத்தீஷ். இவர் டிராவல்ஸ் நிறுவனம் நடத்தி வருகிறார். இவருக்கு சொந்தமான வேன் மறைமலைநகர் அருகே விபத்துக்குள்ளானது. இதில் அந்த வாகனத்தின் முன்பகுதி சேதமடைந்த நிலையில் காப்பீட்டு நிறுவனம் மூலம் இழப்பீடு பெறுவதற்காக வாகனத்தை மறைமலைநகர் டான்சி பஸ் நிறுத்தம் அருகே சாலையோரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் விபத்தில் சிக்கிய வாகனத்தை மெக்கானிக் கடைக்கு எடுத்து சென்று சரி செய்வதற்காக வாகனம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இடத்திற்கு டிராவல்ஸ் உரிமையாளர் ரத்தீஷ் சென்றார். அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த டெம்போ ட்ராவலர் வாகனம் காணாமல் போனதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.இது குறித்து மறைமலைநகர் போலீசில் புகார் செய்தார்.
போலீசார் வழக்குப்பதிவு செய்து மறைமலைநகர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் விபத்துக்குள்ளான வாகனங்களை எடுத்து செல்லும் நபர்களை அழைத்து விசாரணை நடத்தினர்.
அப்போது ஜெய்சிங் என்பவர் போலீசாரிடம் கூறியதாவது:-
ஜஸ்ட் டயல் மூலம் தொடர்பு கொண்ட நபர் தனது வாகனம் விபத்தில் சிக்கியுள்ளதாகவும், அதனை விழுப்புரம் வரை எடுத்து செல்ல வேண்டும் என்று கூறினார். அதன்படி விபத்தில் சிக்கிய வேனை எடுத்து சென்று விழுப்புரம் அருகே விட்டு வந்ததாகவும் போலீசாரிடம் தெரிவித்தார். இதனை தொடர்ந்து மறைமலைநகர் போலீசார் விழுப்புரம் சென்று பழைய இரும்பு கடை அருகே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வேனை மீட்டு திருட்டில் ஈடுபட்ட திருவண்ணாமலையை சேர்ந்த சுரேஷ் (வயது 30), ராமகிருஷ்ணன் (34), விஜய் (30), மற்றும் அச்சரப்பாக்கம் பகுதியை சேர்ந்த கமல் ( 26), ஆகிய 4 பேரையும் போலீசார் கைது செய்து செங்கல்பட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்தினர்.