திருவள்ளூர்
காட்டுப்பள்ளி துறைமுகம் அருகே தனியார் தொழிற்சாலையில் திருடிய 4 பேர் கைது
|காட்டுப்பள்ளி துறைமுகம் அருகே தனியார் தொழிற்சாலையில் திருடிய 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
மீஞ்சூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சைமன்துரை மற்றும் போலீசார் நேற்று முன்தினம் இரவு ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். காட்டுப்பள்ளி துறைமுகம் அருகே ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தபோது முட்புதர்கள் நடுவில் தீ எரிவதை கண்டனர்.
அந்த இடத்திற்கு சென்று பார்த்தபோது போலீசாரை கண்டதும் 4 பேர் கொண்ட கும்பல் தப்பி ஓட முயன்றனர். அந்த கும்பலை மடக்கி பிடித்து விசாரணை செய்தபோது, காட்டுப்பள்ளி துறைமுகம் அருகே பூட்டிக்கிடந்த தனியார் தொழிற்சாலையில் செம்பு வயர்களை திருடி வந்து செம்பை மட்டும் பிரித்தெடுத்து கொண்டிருந்தது தெரியவந்தது. இதனையடுத்து அத்திப்பட்டு பகுதியை சேர்ந்த ரவிக்குமார் (வயது 30), நெட்டுக்குப்பம் பகுதியை சேர்ந்த ராம்குமார் (25), அண்ணாமலைச்சேரி பகுதியை சேர்ந்த திவாகர் (25), எர்ணாவூர் பகுதியை சேர்ந்த பரத் (22) ஆகியோரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்த 40 கிலோ செம்பு கம்பிகள் பறிமுதல் செய்யப்பட்டது.