சென்னை
கொரட்டூர் அருகே ஷோரூமில் மோட்டார் சைக்கிளை திருடிய 4 பேர் கைது - சந்தர்ப்பத்தை பயன்படுத்தி பணம் திருடிய மேலாளர் சிக்கினார்
|கொரட்டூர் அருகே ஷோரூமில் மோட்டார் சைக்கிளை திருடிய 4 பேர் கைது செய்யப்பட்டனர். சந்தர்ப்பத்தை பயன்படுத்தி பணம் திருடிய மேலாளர் சிக்கினார்.
சென்னை கொரட்டுர், பாடி அருகே மோட்டார் சைக்கிள் ஷோரூம் உள்ளது. கடந்த நவம்பர் மாதம் 19-ந் தேதி இரவு ஷோரூமின் கதவு உடைக்கப்பட்டு விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த ரூ.5 லட்சம் மதிப்பிலான 2 மோட்டார் சைக்கிள் மற்றும் கல்லாப்பெட்டியில் இருந்த பணத்தை மர்ம நபர்கள் திருடி சென்றுள்ளனர். இது குறித்து ஷோரூம் உரிமையாளர் ஸ்ரீதேவி கொரட்டூர் குற்றப்பிரிவு போலீசில் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் ரமணி வழக்கு பதிவு செய்து விசாரித்து வந்தார்.
அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா மற்றும் குற்றவாளிகளின் செல்போன் எண்ணை வைத்து தேடி வந்த நிலையில் தண்டையார்பட்டையை சேர்ந்த இமானுவேல் (வயது 28), கொடுங்கையூரை சேர்ந்த மணிகண்டன் (23), கொருக்குப்பேட்டையை சேர்ந்த மோகன் (22) மற்றும் திருவொற்றியூரைச் சேர்ந்த சூர்யா (24) ஆகிய 4 பேரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 2 மோட்டார் சைக்கிள்களை பறிமுதல் செய்த போலீசார் அவர்களின் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
மேலும் மோட்டார் சைக்கிள் திருட்டு போன சந்தர்ப்பத்தை பயன்படுத்தி ஷோருமில் ரூ.1500 திருடிய மேலாளர் எழிலரசன் என்பவரையும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.