< Back
மாநில செய்திகள்
மின்சார ரெயில்களில் பட்டாசு கொண்டு சென்ற 4 பேர் கைது
மாநில செய்திகள்

மின்சார ரெயில்களில் பட்டாசு கொண்டு சென்ற 4 பேர் கைது

தினத்தந்தி
|
11 Nov 2023 3:38 AM IST

மின்சார ரெயில்களில் தடையை மீறி பட்டாசு கொண்டு சென்ற 4 பேரை ரெயில்வே பாதுகாப்பு படை போலீசார் கைது செய்தனர்.

சென்னை,

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ரெயில்களில் பட்டாசு கொண்டு செல்வதை தடுக்கும் வகையில் ரெயில்வே போலீசாரும், ரெயில்வே பாதுகாப்பு படையினரும் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். தடையை மீறி பட்டாசுகளை கொண்டு செல்லும் நபர்களுக்கு அபராதம் அல்லது 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படும் என ரெயில்வே போலீசார் எச்சரிக்கை விடுத்தனர்.

இந்த நிலையில், சென்டிரல், எழும்பூர், கிண்டி, தாம்பரம், பெரம்பூர் உள்ளிட்ட ரெயில் நிலையங்களில் ரெயில்வே போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

அந்த வகையில், நேற்று பல்வேறு ரெயில் நிலையங்களில் நடத்திய சோதனையில் தடையை மீறி பட்டாசு எடுத்து சென்ற 4 பேர் பிடிபட்டனர். சென்னை சென்டிரலில் இருந்து திருத்தணி சென்ற மின்சார ரெயிலில் புளியமங்கலம் ரெயில் நிலையத்தில் போலீசார் சோதனை நடத்தினர். அப்போது, பட்டாசு வைத்திருந்த 2 பேர் பிடிபட்டனர். அவர்களிடம் நடத்திய விசாரனையில், பிரதாப் குமார் (வயது 24) மற்றும் ஹரி பிரசாத் (19) என்றும், கொரட்டூரில் இருந்து ரூ.15 ஆயிரத்திற்கு பட்டாசுகளை வாங்கி வந்ததும் தெரியவந்தது. அவர்களை போலீசார் கைது செய்து தலா ரூ.1,000 அபராதம் விதித்தனர்.

கைது

இதேபோல, மூர்மார்கெட் ரெயில் நிலையத்தின் நடைமேடையில் ரெயில்வே பாதுகாப்பு படையினர் செய்தபோது தண்டையார்பேட்டையை சேர்ந்த தண்டபாணி (39) மற்றும் அயப்பாக்கத்தை சேர்ந்த ராமமூர்த்தி (38) ஆகிய 2 பேர் பிடிபட்டனர். இவர்களிடம் கைப்பற்றப்பட்ட பட்டாசுகளின் மதிப்பு ரூ.7 ஆயிரம் என பாதுகாப்பு படை போலீசார் தெரிவித்தனர். பின்னர், இருவருக்கும் தலா ரூ.1,000 அபராதம் விதிக்கப்பட்டது. 4 பேரும் ரெயில்வே கோர்ட்டில் ஆஜராகி பின்னர் விடுவிக்கப்பட்டனர்.

ரெயில்களில் பட்டாசுகள் மற்றும் எளிதில் தீப்பற்றக்கூடிய பொருட்களை எடுத்து செல்வது பயணிகளின் விலை மதிப்பற்ற உயிர்களுக்கு கடுமையான அச்சுறுத்தலை ஏற்படுத்தக்கூடும். எனவே, பயணிகள் தீப்பற்றக்கூடிய பொருட்களை கொண்டு செல்ல வேண்டாம் என ரெயில்வே பாதுகாப்பு படை போலீசார் தெரிவித்துள்ளனர்.

மேலும் செய்திகள்