< Back
மாநில செய்திகள்
மயிலாப்பூர் ரவுடி கொலை வழக்கில் மேலும் 4 பேர் அதிரடி கைது - கோர்ட்டில் சரண் அடைய சென்றவர்களை மடக்கியதாக போலீசார் தகவல்
சென்னை
மாநில செய்திகள்

மயிலாப்பூர் ரவுடி கொலை வழக்கில் மேலும் 4 பேர் அதிரடி கைது - கோர்ட்டில் சரண் அடைய சென்றவர்களை மடக்கியதாக போலீசார் தகவல்

தினத்தந்தி
|
12 July 2023 1:12 PM IST

சென்னை மயிலாப்பூர் ரவுடி கொலை செய்யப்பட்ட வழக்கில் முக்கிய குற்றவாளிகள் மேலும் 4 பேர் அதிரடியாக கைது செய்யப்பட்டனர்.

சென்னை மயிலாப்பூர் பல்லக்கு மாநகர் பகுதியைச் சேர்ந்தவர் டொக்கன் ராஜா (வயது 45). பிரபல ரவுடியான இவர் மீது கொலை உள்பட 25-க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளது. சிறையில் அடைக்கப்பட்டிருந்த இவர் சமீபத்தில்தான் ஜாமீனில் விடுதலை ஆகி வெளியில் வந்தார். இவரை வீட்டு வாசலில் வைத்து மர்ம நபர்கள் சிலர் சரமாரியாக வெட்டி படுகொலை செய்தனர்.

இந்த வழக்கில் குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய கமிஷனர் சந்தீப்ராய்ரத்தோர் உத்தரவிட்டார். கூடுதல் கமிஷனர் பிரேம்ஆனந்த் சின்கா, இணை கமிஷனர் சிபிசக்கரவர்த்தி ஆகியோரின் நேரடி மேற்பார்வையில், மயிலாப்பூர் இன்ஸ்பெக்டர் ரவி தலைமையில் 4 தனிப்படை போலீசார் களத்தில் இறங்கி அதிரடி விசாரணை நடத்தினார்கள்.

விசாரணையில் ரவுடி டொக்கன் ராஜாவை தீர்த்துக்கட்டிய கும்பல் பற்றி தகவல் வெளியானது. இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியான பல்லக்குமாநகர் பகுதியைச் சேர்ந்த கார்த்திக் (25) என்பவர் அதிரடியாக கைது செய்யப்பட்டார். அவரிடம் விசாரணை நடத்தியபோது, டொக்கன்ராஜாவை தீர்த்துக்கட்டியது ஏன், என்பது குறித்து திடுக்கிடும் தகவல்கள் வெளியானது.

கடந்த 22 ஆண்டுகளுக்கு முன்பு இதே பல்லக்குமாநகர் பகுதியில் கதிரவன் என்பவர் கொலை செய்யப்பட்டார். கதிரவன் கொலை செய்யப்பட்ட போது, அவரது மகன்கள் இருவர் சிறுவர்களாக இருந்தனர். கணவர் கதிரவன் கொலை செய்யப்பட்டவுடன், இரண்டு குழந்தைகளையும் அழைத்துக்கொண்டு அவரது மனைவி கண்ணகி நகர் பகுதிக்கு போய் விட்டார். அவரது இரண்டு மகன்களும் இப்போது வாலிபர்களாக உள்ளனர். கடந்த வாரம், அவர்களிடம், டொக்கன்ராஜா, உங்கள் தந்தையை நான்தான் போட்டு தள்ளினேன், என்று வாய்ச்சவடால் விட்டுள்ளார். ஆனால் உண்மையில் டொக்கன் ராஜா, கதிரவன் கொலையில் போலீசாரால் அப்போது கைது செய்யப்படவில்லை. தனது நண்பர் ஒருவருக்காக, கதிரவனின் மகன்களை மிரட்டுவதற்காக, டொக்கன் ராஜா கதை விட்டதாக தெரிகிறது. ஆனால் அதை உண்மை என்று நம்பி, கதிரவனின் ஒரு மகன் நரேஷ்குமார் தனது நண்பர்கள் உறவினர்கள் உதவியுடன் டொக்கன் ராஜாவை தீர்த்துகட்டி விட்டதாக போலீசார் தெரிவித்தனர்.

இதற்கிடையில் இந்த வழக்கில் தேடப்பட்ட நரேஷ்குமார் (23) மற்றும் திருவள்ளூர் அருகே உள்ள பெருமாள்பட்டு பகுதியைச் சேர்ந்த ராஜேஷ் (22), சபரிநாத் (22), மனோஜ்குமார் (21) ஆகியோர் திண்டிவனம் கோர்ட்டில் சரண் அடைய முயற்சித்தனர் என்றும், இந்த தகவல் தெரிந்து, அவர்கள் 4 பேரையும் சுற்றி வளைத்து கைது செய்ததாகவும், போலீசார் நேற்று அறிவிப்பு வெளியிட்டனர். அவர்கள் 4 பேர்களிடம் விசாரணை நடப்பதாகவும் போலீசார் கூறினார்கள்.

மேலும் செய்திகள்