< Back
மாநில செய்திகள்
திருவொற்றியூரில் கடலில் குளித்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் ராட்சத அலையில் சிக்கி மாயம்
சென்னை
மாநில செய்திகள்

திருவொற்றியூரில் கடலில் குளித்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் ராட்சத அலையில் சிக்கி மாயம்

தினத்தந்தி
|
15 Aug 2022 10:42 AM IST

சென்னை திருவொற்றியூரில் கடலில் குளித்தேபாது ராட்சத அலையில் சிக்கி 4 பேர் மாயமானார்கள். ஒரே குடும்பத்தைச் சேர்ந்த அவர்களை தீயணைப்பு வீரர்கள் தேடி வருகின்றனர்.

கடலில் குளித்தனர்

சென்னை கொருக்குப்பேட்டை அம்பேத்கர் நகர் 2-வது தெருவை சேர்ந்தவர் கரீம் மொய்தீன். இவரது குடும்பத்தினர் 9 பேர் ஒரு ஆட்டோ மற்றும் மோட்டார் சைக்கிள்களில் நேற்று காலை 9 மணி அளவில் திருவொற்றியூர் பலகை தொட்டி குப்பம் அருகே கடலில் குளிக்க வந்தனர்.

கடலில் 9 பேரும் குளித்து விளையாடி கொண்டிருந்தனர். அப்போது திடீரென கடலில் தோன்றிய ராட்சத அலை அவர்களில் 4 பேரை கடலுக்குள் இழுத்துச்சென்றது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர்களது உறவினர்கள், 4 பேரையும் காப்பாற்றும்படி கூச்சலிட்டனர்.

4 பேர் மாயம்

உடனே அருகில் இருந்த மீனவர்கள் ஓடிவந்து கடலுக்குள் குதித்து ராட்சத அலையில் இழுத்துச்செல்லப்பட்ட ஆட்டோ டிரைவர் கபீர் (வயது 24), அம்ரின் (18), அவருடைய தம்பி ஆபான் (14) மற்றும் அவர்களது நண்பர் சபரி (16) ஆகிய 4 பேரையும் தேடி வருகின்றனர்.

இதுபற்றி தகவல் அறிந்து வந்த திருவொற்றியூர் போலீசார், தீயணைப்பு படையினர் மற்றும் மெரினா சிறப்பு நீச்சல் படை வீரர்கள் கடலில் மாயமான 4 பேரையும் தீவிரமாக தேடி வருகின்றனர்.

சம்பவ இடத்துக்கு வந்த திருவொற்றியூர் எம்.எல்.ஏ. கே.பி.சங்கர், 4 பேரின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார். மேலும் 4 பேரையும் விரைந்து மீட்க நடவடிக்கை எடுக்கும்படி தீயணைப்பு துறையினர் மற்றும் போலீசாரிடம் அறிவுறுத்திய அவர், அவர்களுக்கு துணையாக உள்ளூர் மீனவர்களை 4 படகுகள் மூலம் தேடவும், எந்த நேரத்திலும் தயாராக இருக்கும்படியும் அறிவுறுத்தினார்.

மாயமான 4 பேரின் குடும்பத்தினர் கடற்கரையில் நின்று கதறி அழுதபடி இருந்தனர். இது பார்க்க பரிதாபமாக இருந்தது. சம்பவம் குறித்து திருவொற்றியூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

மற்றொரு சம்பவம்

அதேபோல் கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த சகீனா (48) என்ற பெண் தனது குடும்பத்தினரோடு சென்னை எர்ணாவூர் ராமகிருஷ்ணா நகரில் நடைபெற்ற திருமண விழாவில் கலந்து கொண்டார். பின்னர் அனைவரும் அங்குள்ள கடற்கரையில் குளித்தனர். அப்போது ராட்சத அலையில் சிக்கிய சகீனாவை அருகில் உள்ளவர்கள் மீட்டனர்.

இதில் மயங்கிய அவரை மீட்டு ஸ்டான்லி ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர். ஆனால் செல்லும் வழியிலேயே சகீனா பரிதாபமாக இறந்தார். இதுபற்றி எண்ணூர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்