< Back
மாநில செய்திகள்
அம்பை அருகே மோட்டார் சைக்கிள் மீது டிப்பர் லாரி மோதி 2 வயது குழந்தை உள்பட ஒரே குடும்பத்தில் 4 பேர் பலி
மாநில செய்திகள்

அம்பை அருகே மோட்டார் சைக்கிள் மீது டிப்பர் லாரி மோதி 2 வயது குழந்தை உள்பட ஒரே குடும்பத்தில் 4 பேர் பலி

தினத்தந்தி
|
7 July 2023 5:15 AM IST

அம்பை அருகே மோட்டார் சைக்கிள் மீது டிப்பர் லாரி மோதிய விபத்தில் 2 வயது குழந்தை உள்பட ஒரே குடும்பத்தில் 4 பேர் பலியானார்கள்.

கோவிலுக்கு...

நெல்லை மாவட்டம் கல்லிடைக்குறிச்சி கரந்தை ஆசாரிமார் தெருவைச் சேர்ந்தவர் மாடசாமி, கட்டிட தொழிலாளி. இவருைடய மனைவி அலங்காரி என்ற சரஸ்வதி (வயது 50). இவர்களுடைய மகன் இசக்கிராஜ் (வயது 30). இவர் ஏ.சி. மெக்கானிக்காக வேலை செய்து வந்தார். இவர்களுடைய உறவுக்கார குழந்தைக்கு நேற்று காரையாறு சொரிமுத்து அய்யனார் கோவிலில் காதணி அணியும் விழா நடந்தது. இதனால் இசக்கிராஜ் தன்னுடைய தாயார் சரஸ்வதி, தங்கை கார்த்திகா (25), இவருடைய மகன் சந்துரு (2) ஆகியோரை மோட்டார் சைக்கிளில் ஏற்றிக்கொண்டு காரையாறுக்கு புறப்பட்டு சென்று கொண்டிருந்தார். அப்போது விக்கிரமசிங்கபுரத்தில் இருந்து அம்பை நோக்கி டிப்பர் லாரி ஒன்று வந்து கொண்டிருந்தது. அம்பை அருகே கோடாரங்குளம் விலக்கு அருகில் வந்தபோது, அந்த லாரி திடீரென்று டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடி இசக்கிராஜ் குடும்பத்தினர் வந்த மோட்டார் சைக்கிள் மீது பயங்கரமாக மோதியது.

4 பேர் பலி

இதில் மோட்டார் சைக்கிள் சிறிது தொலைவுக்கு தூக்கி வீசப்பட்டது. மோட்டார் சைக்கிளில் வந்த சரஸ்வதி, கார்த்திகா, குழந்தை சந்துரு ஆகிய 3 பேரும் பலத்த காயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர். இசக்கிராஜ் படுகாயமடைந்து உயிருக்கு போராடியவாறு கிடந்தார். மோட்டார் சைக்கிள் மீது மோதிய வேகத்தில் லாரியானது சாலையின் வலதுபுறம் பாய்ந்து சாலையோர எச்சரிக்கை பலகை கம்பியில் மோதி நின்றது. அந்த வழியாக சென்றவர்கள் இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்து அம்பை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனே இன்ஸ்பெக்டர் மகேஷ்வரன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர்.

படுகாயமடைந்த இசக்கிராஜை மீட்டு அம்பை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனாலும் சிகிச்சை பலனின்றி சிறிதுநேரத்தில் இசக்கிராஜ் பரிதாபமாக இறந்தார்.

டிரைவர் கைது

விபத்தில் இறந்த 4 பேரின் உடல்களும் பிரேத பரிசோதனைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டன. அவர்களின் உடல்களை பார்த்து உறவினர்கள் கதறி அழுதது கல்நெஞ்சையும் கரைய வைப்பதாக இருந்தது. இந்த விபத்து தொடர்பாக லாரி டிரைவரான விக்கிரமசிங்கபுரம் பசுக்கிடைவிளை அம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த மயில் மகன் அசோக்கை (33) போலீசார் கைது செய்தனர்.

உருக்கமான தகவல்கள்

விபத்தில் இறந்தவர்கள் பற்றி பல்வேறு உருக்கமான தகவல்கள் கிடைத்து உள்ளன. இசக்கிராஜிக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டு, இன்னும் ஒரு மாதத்தில் திருமணம் நடைபெற இருந்தது.

மேலும் விபத்தில் இறந்த கார்த்திகா காதல் திருமணம் செய்தவர் ஆவார். அவருடைய கணவர் பழனி. இவர்கள் கல்லிடைக்குறிச்சியில் வசித்து வந்தனர். இந்த நிலையில் உறவினரின் குழந்தை காதணி அணியும் விழாவில் கலந்து கொள்ள சென்ற இசக்கிராஜ், கார்த்திகா, அவருடைய குழந்தை விபத்தில் சிக்கி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்