இலங்கை கடற்படையினரால் மயிலாடுதுறை மீனவர்கள் 4 பேர் கைது - மக்கள் நீதி மய்யம் கண்டனம்
|இலங்கை கடற்படையின் தொடர் அத்துமீறலை மத்திய அரசு கண்டுகொள்ளாமல் இருப்பதும் வேதனை அளிக்கிறது என்று மக்கள் நீதி மய்யம் தெரிவித்துள்ளது.
சென்னை,
இலங்கை கடற்படையின் தொடர் அத்துமீறலை மத்திய அரசு கண்டுகொள்ளாமல் இருப்பதும் வேதனை அளிக்கிறது என்று மக்கள் நீதி மய்யம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக மக்கள் நீதி மய்யம் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:-
"மயிலாடுதுறை மாவட்டத்தைச் சேர்ந்த மீனவர்கள் பாண்டியன், சக்திவேல், திருச்செல்வன் உள்ளிட்ட 4 பேர் கோடியக்கரையில் இருந்து ஆழ்கடலில் மீன்பிடிக்கச் சென்றுள்ளனர். இந்நிலையில், எல்லை தாண்டி வந்ததாகக் கூறி அவர்களை இலங்கை கடற் படையினர் கைது செய்துள்ளது கடும் கண்டனத்துக்குரியது.
தமிழ்நாட்டைச் சேர்ந்த மீனவர்கள் கைது செய்யப்படுவதும், இலங்கை கடற்படையின் தொடர் அத்துமீறலை மத்திய அரசு கண்டுகொள்ளாமல் இருப்பதும் வேதனை அளிக்கிறது. தமிழ்நாட்டைச் சேர்ந்த மீனவர்கள், இலங்கை ராணுவத்தினரால் அத்துமீறி கைது செய்யப்படுவதைத் தடுத்து நிறுத்தவும், இலங்கையை எச்சரிக்கவும் மத்திய அரசு முன்வர வேண்டும். இது தொடர்பாக மத்திய அரசுக்கு, தமிழக அரசு உரிய அழுத்தம் தர வேண்டுமென மக்கள் நீதி மய்யம் கேட்டுக் கொள்கிறது."
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.