திண்டுக்கல்
வடமதுரை போலீஸ் நிலையத்தில் 4 காதல் ஜோடிகள் தஞ்சம்
|வடமதுரை போலீஸ் நிலையத்தில் 2 நாட்களில் 4 காதல் ஜோடிகள் தஞ்சம் அடைந்தனர்.
வடமதுரை போலீஸ் நிலையத்தில் 2 நாட்களில் 4 காதல் ஜோடிகள் தஞ்சம் அடைந்தனர்.
காதல் ஜோடி தஞ்சம்
வடமதுரை அருகே உள்ள கோட்டைகட்டியூரை சேர்ந்தவர் சவுடீஸ்வரன் (வயது 27). இவர் வேடசந்தூர் அருகே உள்ள தனியார் நூற்பாலையில் பிட்டராக வேலை செய்து வருகிறார். அதே நூற்பாலையில் மாமரத்துப்பட்டியை சேர்ந்த ராதிகா (21) என்பவரும் வேலை பார்த்து வந்தார். அப்போது அவர்கள் 2 பேருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு, கடந்த சில மாதங்களாக காதலித்து வந்தனர். இவர்களின் காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால் வீட்டை விட்டு வெளியேறி வடமதுரை அருகே உள்ள ஒரு கோவிலில் திருமணம் செய்து கொண்டனர். பின்னர் அவர்கள் வடமதுரை போலீஸ் நிலையத்தில் தஞ்சம் அடைந்தனர்.
இதேபோல் சாணார்பட்டி அருகே உள்ள ஒத்தநாவலாம்பட்டியை சேர்ந்த வெல்லம்மாளும் (20), அதே பகுதியை சேர்ந்த குருமூர்த்தியும் (25) காதலித்து வந்தனர். இதற்கிடையே காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவிப்பார்கள் என்று எண்ணிய அவர்கள் 2 பேரும் வீட்டை விட்டு வெளியேறி ஒரு கோவிலில் திருமணம் செய்து கொண்டனர். அதன்பின்னர் பாதுகாப்பு கேட்டு வடமதுரை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் அவர்கள் தஞ்சம் அடைந்தனர்.
போலீசார் சமரசம்
வடமதுரை அருகே உள்ள கோப்பம்பட்டியை சேர்ந்தவர் சரண்யா (20). இவர் நர்சிங் படித்து விட்டு வீட்டில் இருந்தார். முள்ளிப்பாடி அருகே உள்ள செட்டியபட்டியை சேர்ந்தவர் ஈஸ்வரன் (22). இவர்கள் இருவரும் கடந்த சில மாதங்களாக காதலித்து வந்தனர். வீட்டில் இருந்து வெளியேறிய இருவரும் திருமணம் செய்து கொண்டு, வடமதுரை போலீசில் தஞ்சம் அடைந்தனர்.
எரியோடு அருகே உள்ள மூக்கையகவுண்டனூரை சேர்ந்த நல்லேந்திரனும் (22), தென்னம்பட்டியை சேர்ந்த தேவதர்ஷினியும் (20) காதலித்து வந்தனர். இந்தநிலையில் தங்கள் வீட்டை விட்டு வெளியேறிய காதல் ஜோடி, வடமதுரை அருகே உள்ள ஒரு கோவிலில் திருமணம் செய்து கொண்டனர். பின்னர் அவர்கள் வடமதுரை போலீசில் தஞ்சம் அடைந்தனர். இதைத்தொடர்ந்து தஞ்சமடைந்த 4 காதல் ஜோடிகளின் பெற்றோருடன் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி, அவர்களை சமரசம் செய்து வைத்தனர்.