4 மக்களவை, ஒரு மாநிலங்களவை - தே.மு.தி.க. உறுதி
|தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது.
சென்னை,
ஜனநாயக திருவிழாவான நாடாளுமன்ற தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. இதற்கான நடவடிக்கைகளில் தேர்தல் ஆணையம் தீவிரம் காட்டி வருகிறது. தேர்தல் தேதி அறிவிப்பதற்கு முன்பே அனைத்து கட்சிகளும் தேர்தலை எதிர்கொள்ள தயாராகி வருகின்றன.
தமிழகத்தில் ஆளும் கட்சியான தி.மு.க., பிரதான எதிர்க்கட்சி அ.தி.மு.க. மற்றும் பிற கட்சிகளான பா.ஜ.க., நாம் தமிழர் கட்சி தனித்தனியாக தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வருவதால் தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது.
இந்த நிலையில், வரும் நாடாளுமன்றத் தேர்தலில் 4 மக்களவை தொகுதிகளும், 1 மாநிலங்களவை தொகுதியும் வழங்கும் கட்சியுடன் தே.மு.தி.க. கூட்டணி அமைக்க வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தே.மு.தி.க. சார்பில் மறைந்த விஜயகாந்தின் மூத்த மகன் விஜய பிரபாகரனும், எல்.கே.சுதீஷ் ஆகியோர் போட்டியிட உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் கடந்த தேர்தலில் கள்ளக்குறிச்சியில் போட்டியிட்ட சுதீஷ் மீண்டும் அங்கு போட்டியிட வாய்ப்பு உள்ளதாக கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க.வுடன் கூட்டணி வைக்க தே.மு.தி.க. பொதுச்செயலாளர் பிரேமலதா விரும்புவதாகவும் வரும் 7-ம் தேதி நடைபெறும் மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் இது குறித்து ஆலோசனை நடத்த திட்டமிட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.