திருவாரூர்
பசுமை தமிழ்நாடு இயக்கத்தின் சார்பில் 4 லட்சம் மரக்கன்று நடப்படுகிறது
|பசுமை தமிழ்நாடு இயக்கத்தின் சார்பில் 4 லட்சம் மரக்கன்று நடப்படுகிறது
திருவாரூர் மாவட்டத்தில் பசுமை தமிழ்நாடு இயக்கத்தின் சார்பில் 4 லட்சம் மரக்கன்று நடப்படுகிறது என கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன் கூறினார்.
பசுமை தமிழ்நாடு இயக்கம்
திருவாரூர் மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் மாவட்ட போலீஸ்துறை, பசுமை தமிழ்நாடு இயக்கம் மற்றும் வனத்துறை சார்பில் 200 மரக்கன்றுகள் நட திட்டமிடப்பட்டுள்ளது. அதன்படி நேற்று ஆயுதப்படை மைதானத்தில் மரகன்றுகள் நடும் பணியினை கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன் தொடங்கி வைத்தார்.
அப்போது அவர் கூறியதாவது:-
வனத்துறையின் சார்பில் தமிழகத்தின் வனப்பரப்பை அதிகப்படுத்தும் நோக்கில் நடப்பாண்டில் முதற்கட்டமாக 2 கோடியே 80 லட்சம் மரக்கன்றுகள் நடும் திட்டமான பசுமை தமிழ்நாடு இயக்கத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
4 லட்சம் மரக்கன்றுகள் நட திட்டம்
அதன்படி திருவாரூர் மாவட்டத்தில் வனத்துறை மூலம் மாவட்ட முழுவதும் அரசு அலுவலகங்கள், பள்ளி, கல்லூரி உள்ளிட்ட கல்வி நிறுவனங்கள் ஆகிய இடங்களில் 4 லட்சம் மரக்கன்றுகள் நட திட்டமிட்டு பணிகள் நடைபெற உள்ளது.
இவ்வாறு கலெக்டர் கூறினார்.
நிகழ்ச்சியில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுரேஷ்குமார், மாவட்ட வன அலுவலர் அறிவொழி, உதவி கலெக்டர் சங்கீதா, தாசில்தார் நக்கீரன் உள்பட பலர் உடனிருந்தனர்.