4¼ லட்சம் பேர் பயன் அடைவார்கள்... மாற்றுத்திறனாளிகள் ஓய்வூதியம் உயர்வு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
|தமிழகத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்படும் ஓய்வூதியம் ரூ.1,500 ஆக உயர்த்தப்படும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
ஆண்டுதோறும் டிசம்பர் 3-ந்தேதி உலக மாற்றுத்திறனாளிகள் தின விழா கொண்டாடப்படுகிறது.
சென்னை கலைவாணர் அரங்கத்தில் உலக மாற்றுத்திறனாளிகள் தினத்தையொட்டி, மாற்றுத்திறனாளிகளின் நலனுக்காக சிறப்பான முறையில் சேவை புரிந்தவர்களுக்கு மாநில விருதுகள் வழங்கும் விழா நேற்று நடைபெற்றது.
விழாவில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு, விருதுகளை வழங்கியதுடன் மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளையும் வழங்கினார்.
விருது பெற்ற நபர்கள் மற்றும் நிறுவனங்களுக்கு தலா 10 கிராம் எடையுள்ள தங்கப்பதக்கமும், பாராட்டு சான்றிதழும் வழங்கப்பட்டது.
விழாவில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-
"ஊனமுற்றோர் என்று சொல்லக்கூடாது; அவர்கள் மாற்றுத்திறனாளிகள்" என்ற புதிய பெயரை கொடுத்து, புதிய நம்பிக்கையை உருவாக்கியவர்தான் தலைவர் கருணாநிதி.
மாற்றுத்திறனாளிகளுக்கென தனித்துறையை உருவாக்கினார். உருவாக்கியது மட்டுமல்ல, அந்தத்துறையை தன் பொறுப்பிலே வைத்துக்கொண்டார்.
அவர் வழியிலே இன்று நானும் அந்த துறையை என் பொறுப்பிலே வைத்து கொண்டிருக்கிறேன். இதன் மூலமாக இம்மக்கள் மீது நாங்கள் வைத்திருக்கக்கூடிய உண்மையான அக்கறையை அனைவரும் அறிந்து கொள்ள முடியும்.
மாற்றுத்திறனாளிகளை அவர்களது பெற்றோரும், உற்றாரும், உறவினரும், நண்பர்களும், இந்த சமூகமும், அரசும் உரிய மரியாதையுடன் நடத்த வேண்டும். அதற்கான உறுதியை நாம் அனைவரும் எடுத்துக்கொண்டாக வேண்டும். சமூகத்தின் மற்ற தரப்பினர் அடையக்கூடிய அனைத்து வசதி, வாய்ப்புகளையும் மாற்றுத்திறனாளிகளும் பெற்றிட வேண்டும்.
சென்னை மெரினா கடற்கரையில் கால்நனைக்க மாற்றுத்திறனாளிகளுக்கு தமிழக அரசு செய்து கொடுத்த ஏற்பாட்டை அனைவரும் அறிவீர்கள். நமது ஈரமான மனதின் காரணமாக மட்டுமல்ல, மாற்றுத்திறனாளிகளின் உரிமை என கருதி நாம் உருவாக்கிய பாதைதான் அந்த அன்புப்பாதை. அதில் சென்று கடலில் கால் வைத்தபோது, மாற்றுத்திறனாளிகளின் மனம் மகிழ்ச்சியால் திளைத்ததை பார்த்து நானும் திளைத்தேன்.
அது மிகப்பெரிய செலவு பிடிக்கக்கூடிய திட்டம் அல்ல. ஆனால் அதனால் விளையும் பயன் என்பது எத்தனை கோடிகள் செலவு செய்தாலும் கிடைக்க முடியாத மகிழ்ச்சி என்பதை நீங்கள் மறந்துவிடக்கூடாது. முன்பெல்லாம் மாற்றுத்திறனாளிகள் வீட்டுக்குள் முடங்கிவிடக்கூடிய காலம் இருந்தது. ஆனால், இப்போது அதைத்தாண்டி, பொதுவெளியில் போராடி முன்னுக்கு வர தொடங்கி விட்டார்கள்.
ஒரு நாட்டின் பொருளாதார வளர்ச்சி அந்த நாட்டின் மனித வளத்தை பொறுத்தே அமையும். சமுதாயத்தில் அங்கம் வகிக்கும் மாற்றுத்திறனாளிகளின் எண்ணிக்கையும் இந்த வளர்ச்சியில் பெரிதும் பங்கு வகிக்கிறது. எனவேதான், மாற்றுத்திறனாளிகளுக்கு உகந்த பணியிடங்களை கண்டறிந்து வேலைவாய்ப்புகளை வழங்க, வல்லுனர் குழு மற்றும் உயர்மட்டக்குழுக்கள் அரசு மற்றும் தனியார் நிறுவனங்களுக்காக அமைக்கப்பட்டு உள்ளன.
இந்த குழுக்கள் சிறப்பாகவும் புதிய தொழில்நுட்பங்களுக்கு ஏற்ற வகையில்மாற்றுத்திறனாளிகள் பணிக் கூடங்களில் பிறரை சாராமல் வேலை செய்வதற்கு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அரசுக்கு ஆலோசனை வழங்கும்.
மாற்றுத்திறனாளிகள் அலுவலகத்திற்கு சென்று பணி செய்ய வேண்டிய தேவை இல்லை; இல்லத்தில் இருந்தே பணி செய்யலாம் என்ற ஒரு சூழ்நிலையை நாம் உருவாக்க போகிறோம். அதற்கு சான்றாகத்தான் "நான் முதல்வன்" திட்டத்தில் தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக்கழகம் மூலம் மாற்றுத்திறனாளிகளுக்கு மடிக்கணினி, மென்பொருளுடன் கூடிய திறன் பயிற்சிகள் அளிக்கப்பட்டு, வேலைவாய்ப்புகள் வழங்கக்கூடிய புதிய முயற்சியும் இங்கே அரங்கேற்றப்பட்டு உள்ளது.
உலக மாற்றுத்திறனாளிகள் நாளில் ஒரு நல்ல அறிவிப்பை வெளியிடுவதில் நான் உள்ளபடியே மகிழ்ச்சி அடைகிறேன். வருவாய்த்துறை மூலம் ஓய்வூதியம் பெற்றுவரும் கண்பார்வையற்ற மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்ட 4 லட்சத்து 39 ஆயிரத்து 315 நபர்களுக்கு, அவர்கள் தற்போது பெற்றுவரும் ஓய்வூதியம் ரூ.1,000-ல் இருந்து ரூ.1,500 ஆக வரும் ஜனவரி 1-ந்தேதி முதல் உயர்த்தி வழங்கப்படும். இதன்மூலம் அரசுக்கு ஆண்டுக்கு ரூ.263 கோடியே 58 லட்சம் கூடுதல் செலவாகும்.
ஆடுகளை மேய்ப்பவர், ஒரே ஒரு ஆட்டை தனது தோளில் தூக்கி சுமந்து வருகிறார் என்றால், அந்த ஆடு நடக்க முடியாத நிலையில் இருக்கும். இதுதான் சமூகநீதி என்று எளிமையான விளக்கத்தை சொன்னவர் யார் தெரியுமா? நம்முடைய தலைவர் கருணாநிதி.
அத்தகைய சமூகநீதி சிந்தனையின் அடித்தளத்தில் அமைந்திருக்கும் இந்த அரசானது, எப்போதும் எந்த சூழலிலும் அனைத்து மக்களின் அரசாக இருக்கும். அதிலும் குறிப்பாக, விளிம்பு நிலையில் இருக்கக்கூடிய மக்களின் அரசாக இருக்கும். அவர்களுக்காகவே திட்டமிடும் அரசாக இருக்கும். அவர்களில் ஒருவராக இருந்து அவர்களின் தேவைகளை தீர்த்து வைக்கக்கூடிய ஒரு அரசாகவே இருக்கும்.
இவ்வாறு அவர் பேசினார்.
விழாவில் அமைச்சர்கள் பொன்முடி, கீதா ஜீவன், மா.சுப்பிரமணியன், சேகர்பாபு, சி.வி.கணேசன், மற்றும் எழிலன் எம்.எல்.ஏ., மாற்றுத்திறனாளிகள் நலத்துறை செயலாளர் ஆனந்தகுமார், தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக்கழக மேலாண்மை இயக்குநர் இன்னசன்ட் திவ்யா, மாற்றுத்திறனாளிகள் நல ஆணையர் ஜெசிந்தா லாசரஸ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.