திருவாரூர்: குலதெய்வ கோவிலில் வழிபாடு நடத்திவிட்டு திரும்பியபோது குளத்திற்குள் பாய்ந்த கார்; ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் பலி
|கார் குளத்திற்குள் பாய்ந்து விபத்துக்குள்ளான சம்பவத்தில் பச்சிளம் குழந்தை உள்பட ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் உயிரிழந்தனர்.
திருவாரூர்,
சென்னை கிழக்கு தாம்பரத்தை சேர்ந்தவர்கள் கணேசன் (வயது 72), இவரது மனைவி பானுமதி (வயது 65), இவரது மகன் சாமிநாதன் (வயது 36), அவரது மனைவி லட்சுமி (வயது 30), சுவாமிநாதன்- லட்சுமி மகன் லட்சுமி நாராயணன் (வயது 1).
ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேரும் திருவாரூர் அருகே உள்ள ஓடாசேரிக்கு குலதெய்வ கோவிலில் வழிபாடு நடத்த கடந்த சனிக்கிழமை சென்னையில் இருந்து காரில் புறப்பட்டு மயிலாடுதுறை வந்தடைந்தனர். அங்கு உள்ள தனியார் ஓட்டலில் தங்கியுள்ளனர்.
பின்னர், மயிலாடுதுறையில் இருந்து இன்று காலை காரில் புறப்பட்ட குடும்பத்தினர் திருவாரூர் அருகே உள்ள ஓடாச்சேரி குலதெய்வ கோவிலில் வழிபாடு சென்றனர். கோவிலில் மதியம் வழிஆடு செய்துவிட்டு மாலை 3 மணியளவில் வீடு திரும்பியுள்ளனர். காரை சாமிநாதன் ஓட்டியுள்ளார்.
இந்நிலையில், திருவாரூர்- மயிலாடுதுறை சாலையில் நன்னிலம் அருகேயுள்ள விசலூர் என்ற இடத்தில் இடது புறமாக சென்ற கார் திடீரென கட்டுப்பாட்டை இழந்து வலது புறம் உள்ள குளத்தில் பாய்ந்து விபத்துக்குள்ளானது.
இந்த விபத்து குறித்து தகவலறிந்த நன்னிலம் தீயணைப்புத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மீட்புப்பணியில் ஈடுபட்டனர்.
தண்ணீரில் மூழ்கிய கார் கதவை மீட்புக்குழுவினரால் திறக்க முடியவில்லை. அதன் பிறகு காரில் உள்ளிருந்த லட்சுமி கையால் கதவைத் திறந்ததாக கூறப்படுகிறது. அதன் பின்பு லட்சுமி மீட்க்கப்பட்டு திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
அதனை தொடர்ந்து கணேசன், சாமிநாதன், பானுமதி, குழந்தை லட்சுமி நாராயணன் ஆகியோர்களை மீட்டபோது குளத்திலேயே பரிதாபமாக உயிர் இழந்துள்ளனர்.
கார் கவிழ்ந்து குளத்தில் மூழ்கி உயிரிழந்த 4 பேரின் உடலை பிரேதபரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள லட்சுமிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கார் சாலையோர குளத்தில் பாய்ந்து விபத்துக்குள்ளான சம்பவத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த குழந்தை உள்பட 4 பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.