திண்டுக்கல்
4 வாலிபர்களுக்கு ஆயுள் தண்டனை
|மிட்டாய் கம்பெனி உரிமையாளர் மகன் கொலை வழக்கில் 4 வாலிபர்களுக்கு ஆயுள் தண்டனை விதித்து திண்டுக்கல் கோர்ட்டு தீர்ப்பளித்தது.
மிட்டாய் கம்பெனி உரிமையாளர்
திண்டுக்கல் முத்தழகுப்பட்டியை சேர்ந்தவர் சண்முகவேல். இவருடைய மனைவி முருகேஸ்வரி. இவர்களுக்கு தட்சிணாமூர்த்தி, சக்திவேல் ஆகிய 2 மகன்களும், ஒரு மகளும் உள்ளனர். சண்முகவேல் முத்தழகுப்பட்டி அருகே மிட்டாய் கம்பெனி நடத்தி வருகிறார். இவருக்கு உதவியாக 2 மகன்கள் இருந்தனர். இந்த நிலையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு அதே பகுதியை சேர்ந்த அலெக்ஸ் என்ற அலெக்ஸ்ராஜ், சண்முகவேலின் மகளை திருமண ஆசைவார்த்தை கூறி அழைத்துச் சென்றுவிட்டார்.
இது குறித்து திண்டுக்கல் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் சண்முகவேல் குடும்பத்தினர் புகார் செய்து, மகளை மீட்டனர். இதற்கிடையே கடந்த 2016-ம் ஆண்டு சண்முகவேலின் மகள் தற்கொலை செய்து கொண்டார்.
ஆயுள் தண்டனை
இதனால் ஆத்திரம் அடைந்த அலெக்ஸ்ராஜின் நண்பர்கள் சிலர் அதே ஆண்டு செப்டம்பர் மாதம் 10-ந்தேதி சண்முகவேலின் மகன் தட்சிணாமூர்த்தியை வெட்டி படுகொலை செய்தனர். இதுகுறித்து தெற்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து முத்தழகுப்பட்டியை சேர்ந்த ஜெபா என்ற செபாஸ்டின் (வயது 29), ஜான் விவேக் என்ற மணி (29), ஜெய்சன் (28), செபாஸ்டின் அசோக் (28) ஆகிய 4 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த வழக்கு விசாரணை கூடுதல் மாவட்ட கோர்ட்டில் நடைபெற்றது. நீதிபதி மெகபூப் அலிகான் வழக்கை விசாரித்தார்.
அரசு தரப்பில் வக்கீல் சூசை ராபர்ட் ஆஜராகி வாதாடினார். வழக்கின் விசாரணை முடிவடைந்த நிலையில் நீதிபதி மெகபூப் அலிகான் நேற்று தீர்ப்பு கூறினார். அதில் குற்றம்சாட்டப்பட்ட ஜெபா என்ற செபாஸ்டின் உள்பட 4 பேருக்கு ஆயுள் தண்டனையும், தலா ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்து உத்தரவிட்டார்.