< Back
மாநில செய்திகள்
தொப்பூர் கணவாயில்  3 லாரிகள் அடுத்தடுத்து   மோதி விபத்து  டிரைவர்கள் உள்பட 4 பேர் காயம்
தர்மபுரி
மாநில செய்திகள்

தொப்பூர் கணவாயில் 3 லாரிகள் அடுத்தடுத்து மோதி விபத்து டிரைவர்கள் உள்பட 4 பேர் காயம்

தினத்தந்தி
|
23 July 2022 11:25 PM IST

தொப்பூர் கணவாயில் 3 லாரிகள் அடுத்தடுத்து மோதி விபத்து டிரைவர்கள் உள்பட 4 பேர் காயம்

நல்லம்பள்ளி:

தொப்பூர் கணவாயில் 3 லாரிகள் அடுத்தடுத்து மோதிய விபத்தில் டிரைவர்கள் உள்பட 4 பேர் படுகாயம் அடைந்தனர்.

அரிசி பாரம்

கர்நாடக மாநிலம் பங்காருபேட்டையில் இருந்து தூத்துக்குடி மாவட்டத்திற்கு அரிசி பாரம் ஏற்றிக்கொண்டு ஒரு லாரி தொப்பூர் கணவாய் வழியாக நேற்று முன்தினம் இரவு சென்றது. லாரியை கிருஷ்ணகிரி மாவட்டம் பையூர் பகுதியை சேர்ந்த ரங்கசாமி (வயது 46) என்பவர் ஓட்டி வந்தார்.

அப்போது தொப்பூர் கணவாய் இரட்டை பாலம் அருகே வந்தபோது, டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த அரிசி பார லாரி சாலையில் தாறுமாறாக ஓடி, முன்னால் குஜராத் மாநிலத்தில் இருந்து ஈரோடு மாவட்டத்திற்கு பஞ்சுபேல் ஏற்றி சென்ற லாரியின் பின்பகுதியில் மோதியது. இதில் பஞ்சுபேல் லாரி சாலையில் கவிழ்ந்தது.

போக்குவரத்து பாதிப்பு

மேலும் தறிகெட்டு ஓடிய அரிசி பார லாரி சென்டர் மீடியனில் மோதி எதிர்திசையில் தூத்துக்குடி மாவட்டத்தில் இருந்து ஐதராபாத்திற்கு உப்பு பாரம் ஏற்றி சென்ற லாரியின் முன்பகுதியில் நேருக்கு நேர் மோதியது. இந்த விபத்தில் ரங்கசாமி மற்றும் 2 டிரைவர்கள் உள்பட 4 பேர் காயம் அடைந்து தவித்தனர். தகவல் அறிந்து வந்த போலீசார் மற்றும் சுங்கச்சாவடி ரோந்து படையினர் இணைந்து 4 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த விபத்தால் சேலம்- பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் சுமார் 3 மணி நேரத்திற்கு மேல் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பின்னர் விபத்துக்குள்ளான வாகனங்களை மீட்புக்குழுவினர் அப்புறப்படுத்தி போக்குவரத்தை சீர் செய்தனர். இதுகுறித்து தொப்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்