சுற்றுலா அழைத்து செல்லாததால் வீட்டுக்கு தெரியாமல் சென்னை மெரினா சென்ற 4 சிறுமிகள்
|சுற்றுலாவுக்கு அழைத்து செல்வதாக கூறி பெற்றோர் காலம் தாழ்த்தி வந்துள்ளனர்.
திருச்சி,
திருச்சி மாவட்டம் எடமலைப்பட்டிபுதூரை சேர்ந்த ஒரே குடும்பத்தை சேர்ந்த 14, 15 வயதுக்கு உட்பட்ட 4 சிறுமிகள் பெற்றோரிடம் சுற்றுலா அழைத்து செல்ல கூறி வற்புறுத்தி வந்துள்ளனர். இதனிடையே, அவர்களுடைய உறவினர்கள் வேளாங்கண்ணிக்கு சென்று சுற்றிப்பார்த்துவிட்டு அந்த புகைப்படங்களை வாட்ஸ்அப்களில் அனுப்பி உள்ளனர்.
இதை கண்ட 4 சிறுமிகளும் தங்களையும் வேளாங்கண்ணிக்கு சுற்றுலா அழைத்து செல்ல கூறி உள்ளனர். ஆனால் பெற்றோர் அழைத்து செல்வதாக கூறி, காலம் தாழ்த்தி வந்துள்ளனர். இதனால் பொறுமையிழந்த 4 பேரும் ஆத்திரம் அடைந்து நேற்று காலை வீட்டில் இருந்து புறப்பட்டு பஸ் ஏறி சென்னைக்கு சென்று விட்டனர்.
இதற்கிடையே 4 சிறுமிகளும் மாயமானதை அறிந்த பெற்றோர் எடமலைப்பட்டிபுதூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். போலீசாரும் அவர்களை பல்வேறு இடங்களில் தேடி பார்த்தனர். இந்தநிலையில் சென்னையில் மெரினா கடற்கரையில் 4 சிறுமிகளும் சுற்றி திரிந்துள்ளனர். இதை கண்ட சென்னை போலீசார் அவர்களை மீட்டு போலீஸ் நிலையம் அழைத்து சென்று விசாரித்தனர்.
விசாரணையில் அவர்கள், வேளாங்கண்ணி அழைத்து செல்லாததால் ஆத்திரம் அடைந்து வீட்டில் இருந்து புறப்பட்டு சென்றது தெரியவந்தது. இதையடுத்து அவர்களை சென்னையில் இருந்து போலீசார் திருச்சிக்கு அழைத்து வந்தனர். அதையடுத்து 4 பேரும் இன்று பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.