< Back
மாநில செய்திகள்
ரூ.4 கோடி முதலீடு பெற்று மோசடி
திருச்சி
மாநில செய்திகள்

ரூ.4 கோடி முதலீடு பெற்று மோசடி

தினத்தந்தி
|
8 July 2023 1:04 AM IST

திருச்சி ஜவுளி வியாபாரியிடம் ரூ.4 கோடி முதலீடு பெற்று மோசடி செய்த`செந்தூர் பின்கார்ப்' நிதிநிறுவன உரிமையாளர் மீண்டும் போலீசாரால் கைது செய்யப்பட்டார்.

திருச்சி ஜவுளி வியாபாரியிடம் ரூ.4 கோடி முதலீடு பெற்று மோசடி செய்த`செந்தூர் பின்கார்ப்' நிதிநிறுவன உரிமையாளர் மீண்டும் போலீசாரால் கைது செய்யப்பட்டார்.

நிதி நிறுவனம்

திருச்சி தில்லை நகரில்`செந்தூர் பின்கார்ப்' என்ற சீட்டு நிறுவனம் செயல்பட்டு வந்தது. திருச்சி மாவட்டத்தை சேர்ந்த முத்துராமலிங்கம்-பாரதி தம்பதியினர் இதை நடத்தி வந்தனர். தமிழகம் முழுவதும் லட்சக்கணக்கானோர் இந்த நிறுவனத்தில் முதலீடு செய்து வந்துள்ளனர்.

மாதம் 35 ஆயிரம் ரூபாய் செலுத்தினால் 300 ரூபாய் வீதம் வட்டி என்றும் அதுபோல் ஒவ்வொரு தொகைக்கும் தினமும் வட்டி வழங்கப்படும் எனவும் ஆசை வார்த்தை கூறி தன் நிறுவனத்தில் ஏராளமான வாடிக்கையாளர்களை இந்நிறுவனம் கவர்ந்ததாக கூறப்படுகிறது.

பல ஆயிரம் கோடி மோசடி

ஆனால் இந்த நிறுவனத்தில் இருந்து வாடிக்கையாளர்களுக்கு வட்டியும் வரவில்லை. செலுத்திய தொகையையும் திருப்பித்தரவில்லை எனத்தெரிகிறது. இதுகுறித்து பாதிக்கப்பட்டவர்கள் போலீஸ்நிலையத்தில் புகார் அளித்தனர். அப்போது கிட்டத்தட்ட 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் தமிழகம் முழுவதும் முதலீடு செய்து மோசடி செய்யப்பட்டுள்ளதாகவும் ஏமாற்றிய தொகை ரூ.1,000 கோடி எனவும் அவர்கள் தெரிவித்தனர்.

இதனால், இதுகுறித்த வழக்கு பொருளாதார குற்றப்பிரிவுக்கு மாற்றப்பட்டது. அதன்பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து இருவரையும் கைது செய்தனர். பின்னர் ஜாமீனில் வெளியே வந்த இவர்கள், நெல்லையில் புதிய நிறுவனத்தை அமைத்து அதில் மீண்டும் பணத்தை முதலீடு செய்தால், ஏற்கனவே கட்டிய தொகையையும் சேர்த்து தருவதாக மீண்டும் ஒரு பித்தலாட்டத்தை அரங்கேற்றியதாக கூறப்படுகிறது.இதற்கிடையே திருச்சி கே.கே.நகரை சேர்ந்த ஜவுளி வியாபாரி சாகுல்அமீது என்பவர் தன்னிடமும் தனது குடும்பத்தினரிடமும் மொத்தம் ரூ.4 கோடியே 7 லட்சத்து 30 ஆயிரம் முதலீடு பெற்று முத்துராமலிங்கம்- பாரதி தம்பதியினர் மோசடி செய்துவிட்டதாக திருச்சி மாநகர குற்றப்பிரிவில் கடந்த மார்ச் மாதம் 11-ந்தேதி புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் அந்த தம்பதி மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

இதில் பாரதியை கைது செய்த போலீசார், முத்துராமலிங்கத்தை தேடி வந்தனர். இந்தநிலையில் நேற்று பெரியகடை வீதி பகுதியில் வைத்து முத்துராமலிங்கத்தை போலீசார் மீண்டும் கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து ரூ.1 லட்சத்து 83 ஆயிரம் மற்றும் நகைகள் பறிமுதல் செய்தனர். பின்னர் அவர் கோர்ட்டில் ஆஜர் படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். அதேநேரம் இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட பாரதி திருச்சி கோர்ட்டில் ஜாமீன் பெற்று வெளியே வந்துவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்