காஞ்சிபுரம்
வாலாஜாபாத் அருகே மின்சாரம் தாக்கி 4 மாடுகள் சாவு
|மின்சாரக்கம்பம் உடைந்து மின் கம்பிகள் அறுந்து கீழே விழுந்ததால் அங்கே மேய்ந்து கொண்டிருந்த 4 கறவை மாடுகள் மீது மின்சாரம் தாக்கி பரிதாபமாக உயிரிழந்தது.
காஞ்சீபுரம் மாவட்டம், வாலாஜாபாத் தாலுகா தொள்ளாழி கிராமம் பெருமாள் கோவில் தெருவை சேர்ந்தவர் விநாயகமூர்த்தி (வயது 53). விவசாயி. இவர் தன்னுடைய வாழ்வாதாரத்திற்காக 4 கறவை மாடுகளை வளர்த்து வருகிறார். நாள்தோறும் பசு மாடுகளை மேய்ச்சலுக்காக அவிழ்த்து விடுவது வழக்கம்.
இந்த நிலையில் பசு மாடுகளை விநாயக மூர்த்தி அவிழ்த்து விட்ட நிலையில் மேய்ச்சலுக்கு சென்ற பசு மாடுகள் நீண்ட நேரமாக வரவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த விநாயகமூர்த்தி மேய்ச்சல் நிலத்திற்கு சென்று பார்த்தபோது அருகில் உள்ள விவசாய நிலத்தில் இருந்த மின்கம்பம் உடைந்து விழுந்து, மின்சார கம்பிகள் கீழே கிடப்பதை கண்டு திடுக்கிட்டு உடனடியாக வாலாஜாபாத் மின்வாரிய அலுவலகத்துக்கு தகவல் தெரிவித்தார்.
இதன் பேரில் மின்வாரிய ஊழியர்கள் மின்சாரத்தை துண்டித்து உள்ளனர். அருகில் சென்று பார்த்தபோது மின்சாரக்கம்பம் உடைந்து மின் கம்பிகள் அறுந்து கீழே விழுந்ததால் அங்கே மேய்ந்து கொண்டிருந்த 4 கறவை மாடுகள் மீது மின்சாரம் தாக்கி பரிதாபமாக உயிரிழந்து காணப்பட்டது.
இதுகுறித்து சாலவாக்கம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.