திருவள்ளூர்
பஸ்சில் கஞ்சா கடத்திய 4 பேர் கைது - 55 கிலோ சிக்கியது
|பஸ்சில் கஞ்சா கடத்திய 4 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து 55 கிலோ கஞ்சா சிக்கியது.
ஆந்திரா மாநிலத்தில் இருந்து திருத்தணி வழியாக தமிழகத்திற்கு கஞ்சா கடத்தி வருவது தொடர்கதையாக உள்ளது. ஆந்திராவை ஒட்டியுள்ள தமிழக எல்லை பகுதிகளில் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட வேண்டும் என மாவட்ட போலீஸ் சூப்பிரணடு் சீபாஸ் கல்யாண் உத்தரவிட்டு இருந்தார். இதையடுத்து திருத்தணி துணை போலீஸ் சூப்பிரண்டு விக்னேஷ் தலைமையிலான போலீசார் தமிழக எல்லையில் அமைந்துள்ள பொன்பாடி சோதனை சாவடியில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது ஆந்திர மாநிலம் திருப்பதில் இருந்து தமிழகத்தை நோக்கி வந்த அரசு பஸ்சை நிறுத்தி சோதனை செய்தனர், போலீசாரை கண்டதும் பஸ்சில் இருந்த வாலிபர் ஒருவர் தப்பியோட முயன்றார். போலீசார் அவரை மடக்கி பிடித்து அவரிடம் இருந்த 18 கிலோ கஞ்சா பொட்டலங்களை பறிமுதல் செய்தனர். விசாரணையில் அவர் சென்னை ஆவடியை சேர்ந்த சுரேஷ் (வயது 22) என்பது தெரியவந்தது.
இதேபோல் திருப்பதியில் இருந்து திருத்தணி நோக்கி வந்த மற்றொரு தனியார் பஸ்சில் சோதனை செய்ததில், சென்னை கொரட்டூர் பகுதியை சேர்ந்த செல்வராஜ் (22), அம்பத்தூர் பகுதியை சேர்ந்த கணேசன் (23), அயனாவரம் பகுதியில் வசிக்கும் வசந்தகுமார் (19) ஆகிய 3 பேரும் 37 கிலோ கஞ்சாவை கடத்தி வந்தது தெரியவந்தது. பின்னர் கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார் 4 பேரையும் கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.