கோவை: டேட்டிங் செய்ய அழைத்து சரமாரி தாக்குதல்.. ஆப் மூலம் வந்த ஆப்பு
|அறிமுகம் இல்லாத பெண் பேசியதை நம்பி சென்ற வாலிபரின் மோட்டார் சைக்கிள், செல்போன் பறித்த 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
கோவை:
இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
கோவை காந்திபுரத்தை சேர்ந்தவர் நாராயணன். இவருடைய மகன் பிரவீன் (வயது 25). தனியார் போக்குவரத்து நிறுவன ஏஜெண்ட். இவருடைய செல்போனுக்கு கடந்த கடந்த மாதம் 26-ந் தேதி இரவு 10 மணியளவில் குறுஞ்செய்தி வந்தது. உடனே அவர் அந்த எண்ணிற்கு தொடர்பு கொண்டு பேசினார். அப்போது எதிர்முனையில் அவருக்கு அறிமுகம் இல்லாத இளம்பெண் பேசினார்.
அந்த பெண், நாகம்மநாயக்கன்பாளையம் வந்தால் தன்னை நேரில் சந்தித்து பேசலாம் என்று கூறி அழைத்ததாக தெரிகிறது. அவர் அதை நம்பி அதிகாலை 1.30 மணியளவில் மோட்டார் சைக்கிளில் அங்கு சென்றார்.
அங்கிருந்த இளம்பெண் அவரை அருகில் உள்ள காட்டுப் பகுதிக்கு அழைத்து சென்றுள்ளார். அங்கிருந்த 3 பேர் திடீரென்று பிரவீனை மிரட்டி செல்போன் மற்றும் மோட்டார் சைக்கிளை பறித்துக் கொண்டு அனுப்பி விட்டனர்.
இது குறித்த புகாரின் பேரில் சூலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் மாதையன், சப் - இன்ஸ்பெக்டர் ராஜேந்திர பிரசாத் மற்றும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
இதில், பிரவீனிடம் செல்போன் பறித்தது திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை ராஜேஷ்குமார் (24), அவருடைய மனைவி ரிதன்யா (20) மற்றும் சின்னக்கரையை சேர்ந்த இளந்தமிழன் (29), தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த சுரேஷ் (23) என்பது தெரிய வந்தது. அவர்கள் 4 பேரையும் போலீசார் கைது செய்தனர்.