< Back
மாநில செய்திகள்
நெல்லை குடியிருப்புப் பகுதியில் 3-வது சிறுத்தை சிக்கியது
மாநில செய்திகள்

நெல்லை குடியிருப்புப் பகுதியில் 3-வது சிறுத்தை சிக்கியது

தினத்தந்தி
|
22 May 2024 8:55 AM IST

வேம்பையாபுரம் பகுதியில் வைக்கப்பட்டிருந்த கூண்டில் இன்று மேலும் ஒரு சிறுத்தை சிக்கியுள்ளது.

நெல்லை,

நெல்லை மாவட்டம் பாபநாசம் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமைந்துள்ள வேம்பையாபுரம் பகுதியைச் சேர்ந்த சங்கர் என்பவரது வீட்டில் கட்டிப்போட்டிருந்த ஆட்டை, வனப்பகுதியில் இருந்து இறங்கிய சிறுத்தை வேட்டையாடி தூக்கிச் சென்றது. இதேபோல் விக்கிரமசிங்கபுரம் அருகே அனவன்குடியிருப்பு பகுதியைச் சேர்ந்த பேச்சிமுத்து என்பவரது வீட்டில் இருந்த ஆட்டையும் சிறுத்தை கடித்து தாக்கியது.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் பாபநாசம் வனச்சரகர் சத்தியவேல் தலைமையிலான வனத்துறையினர் தீவிர ஆய்வு செய்து, இரு பகுதிகளிலும் மோப்பநாய் 'நெஸ்' மூலமாக மோப்பம் பிடித்து சிறுத்தை வந்த வழியாக பின்தொடர்ந்து சென்றனர். பின்னர் சிறுத்தையை பிடிக்க இரும்புக்கூண்டு வைக்கும் இடத்தை தேர்வு செய்தனர்.

அதன்படி வேம்பையாபுரம், அனவன்குடியிருப்பு பகுதிகளில் நடமாடிய சிறுத்தையை பிடிப்பதற்காக, அங்கு இரும்புக்கூண்டுகளை வைத்து வனத்துறையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். கடந்த 19-ந்தேதி வனத்துறையினர் வைத்த கூண்டில் ஒரு சிறுத்தை சிக்கியது.

இந்த நிலையில் அனவன்குடியிருப்பு பகுதியில் வைக்கப்பட்ட கூண்டில் நேற்றிரவு பெண் சிறுத்தை ஒன்று சிக்கியது. இதைத் தொடர்ந்து, வேம்பையாபுரம் பகுதியில் வைக்கப்பட்டிருந்த கூண்டில் இன்று மேலும் ஒரு சிறுத்தை சிக்கியுள்ளது. வனத்துறை வைத்த கூண்டுகளில் ஒரே வாரத்தில் அடுத்தடுத்து 3 சிறுத்தைகள் சிக்கியுள்ளன. பிடிபட்ட சிறுத்தைகள் அடர் வனப்பகுதிக்கு கொண்டு செல்லப்பட உள்ளதாக வனத்துறையினர் தகவல் தெரிவித்துள்ளனர்.

மேலும் செய்திகள்