< Back
மாநில செய்திகள்
3-வதும் பெண் குழந்தை... ஆத்திரத்தில் தந்தை... அடுத்து நடந்த கொடூரம்
மாநில செய்திகள்

3-வதும் பெண் குழந்தை... ஆத்திரத்தில் தந்தை... அடுத்து நடந்த கொடூரம்

தினத்தந்தி
|
19 July 2024 4:42 AM IST

குழந்தையின் வயிற்றில் 3 இடங்களில் ஆயுதத்தால் குத்திய ரத்த காயம் இருந்தது.

சென்னை,

சென்னை வியாசர்பாடி சுந்தரம் 4-வது தெருவைச் சேர்ந்தவர் ராஜ்குமார்(வயது 38). மீன்பாடி வண்டி ஓட்டி வருகிறார். இவரது மனைவி விஜயலட்சுமி. இவர்களுக்கு ஏற்கனவே 5 மற்றும் 3 வயதில் 2 மகள்கள் உள்ளனர்.

இந்த நிலையில் விஜயலட்சுமிக்கு ராயபுரத்தில் உள்ள ஆர்.எஸ் ஆர் எம் ஆஸ்பத்திரியில் கடந்த 1-ம் தேதி 3-வதாகவும் பெண் குழந்தை பிறந்தது. தாயும், சேயும் 5-ம் தேதி வீடு திரும்பினர். 7-ம் தேதி பச்சிளம் குழந்தையின் வயிற்றில் ரத்த காயத்துடன் குடல் சரிந்த நிலையில் சென்னை எழும்பூர் குழந்தைகள் நல ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

குழந்தையின் வயிற்றில் 3 இடங்களில் ஆயுதத்தால் குத்திய ரத்த காயம் இருந்ததால் அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனாலும் சிகிச்சை பலனின்றி 9-ம் தேதி குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது. இதுபற்றி எழும்பூர் குழந்தைகள் நல ஆஸ்பத்திரி டாக்டர் வெங்கடேசன், மாவட்ட குழந்தை நல அலுவலகத்தில் புகார் தெரிவித்தார்.

இது தொடர்பாக வியாசர்பாடி போலீசிலும் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து குழந்தையின் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். பிரேத பரிசோதனைக்கு பிறகு குழந்தையின் உடல் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது. மேலும் இதுபற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர்.

இந்தநிலையில் குழந்தையின் பிரேத பரிசோதனை அறிக்கையில், கூர்மையான ஆயுதத்தால் பச்சிளம் குழந்தையின் வயிற்றில் 3 இடங்களில் குத்தியதால் குழந்தை இறந்துபோனது தெரியவந்தது. இதையடுத்து வியாசர்பாடி போலீசார் குழந்தையின் தந்தை ராஜ்குமாரிடம் விசாரித்தனர். அப்போது ராஜ்குமார், "ஏற்கனவே 2 மகள்கள் உள்ள நிலையில் 3-வதும் பெண் குழந்தை பிறந்ததால் ஆத்திரத்தில் குழந்தையை கத்தரிக்கோலால் குத்திக்கொன்றதாக" ஒப்புக்கொண்டார்.

இந்த வழக்கை கொலை வழக்காக மாற்றிய போலீசார், ராஜ்குமாரை கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பையும், சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்