< Back
மாநில செய்திகள்
வீராணம் ஏரியில் இருந்து வினாடிக்கு 370 கன அடி நீர் வெளியேற்றம்
கடலூர்
மாநில செய்திகள்

வீராணம் ஏரியில் இருந்து வினாடிக்கு 370 கன அடி நீர் வெளியேற்றம்

தினத்தந்தி
|
22 Aug 2023 1:15 AM IST

மேட்டூர் அணையில் கூடுதல் தண்ணீர் திறப்பு எதிரொலியால் வீராணம் ஏரியில் இருந்து வினாடிக்கு 370 கன அடிநீர் வெளியேற்றப்படுகிறது. இந்த நீர் அணைக்கட்டில் சேமித்து வைக்கப்பட்டு 28 கிளைவாய்க்கால்கள் மூலம் பாசனத்துக்கு அனுப்பி வைக்கப்படுகிறது

சேத்தியாத்தோப்பு,

நீர்மட்டம் 46.30 அடி

வீராணம் ஏரிக்கு கடந்த மாதம் மேட்டூர் அணையில் இருந்து திறந்து விடப்பட்ட தண்ணீர் வந்தது. இதனால் வீராணம் ஏரியின் நீர்மட்டம் 46.30 அடியாக(மொத்த நீர்மட்டம் 47.50) உயர்ந்தது. இதனால் ஏரியின் மேல்கரையில் வானமாதேவி மணவெளியில் புதிதாக கட்டப்பட்டுள்ள 32 ஷட்டர் மதகு சரியாக மூடாததால் அந்த வழியாக தண்ணீர் வெளியேறி விவசாய நிலங்களுக்குள் புகுந்தது. பயிர்களும் நீரில் மூழ்கின.

வி.என்.எஸ். மதகு வழியாக வெளியேற்றம்

இதனை தொடர்ந்து நேற்று முன்தினம் பூதங்குடி வி.என்.எஸ். மதகு வழியாக வினாடிக்கு 180 முதல் 200 கன அடி வரை வெள்ளாற்றில் திறந்து விடப்பட்டது. இந்த தண்ணீர் நேற்று வினாடிக்கு 370 கன அடியாக அதிகரித்தது. இதனால் வறண்டு கிடந்த வெள்ளாறு அணைக்கட்டில் நீர்மட்டம் 7 அடியாக(மொத்த நீர்மட்டம் 7½ அடி) உயர்ந்தது. இதையடுத்து அணைக்கட்டில் இருந்து பாசனத்துக்காக 7 பெரிய கிளை வாய்க்கால், 21 சிறிய கிளை வாய்க்கால் வழியாக தண்ணீர் திறந்து விடப்பட்டது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

கிளைவாய்க்கால்கள் மூலம் பாசனத்துக்கு...

இது குறித்து பொதுப்பணித்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், மேட்டூர் அணையில் இருந்து பாசனத்துக்காக கூடுதல் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. அந்த தண்ணீர் கீழணையில் இருந்து வடவாறு வழியாக வீராணம் ஏரிக்கு வரும் என்று எதிர்பார்க்கிறோம். எனவே முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வீராணம் ஏரி வி.என்.எஸ். மதகு வழியாக தண்ணீரை வெளியேற்றி வெள்ளாறு அணைக்கட்டில் தேக்கி வைத்து கிளை வாய்க்கால்கள் மூலம் பாசனத்துக்கு அனுப்பி வைக்கிறோம். இதுபோக சென்னை மக்களின் குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 53 கனஅடி அனுப்பி வைக்கிறோம் என்றார்.

மேலும் செய்திகள்