< Back
மாநில செய்திகள்
தொழிலதிபர் வீட்டில் 36 பவுன் நகை  கொள்ளை
விருதுநகர்
மாநில செய்திகள்

தொழிலதிபர் வீட்டில் 36 பவுன் நகை கொள்ளை

தினத்தந்தி
|
27 Sept 2022 12:40 AM IST

சிவகாசி தொழில் அதிபர் வீட்டில் பீரோவை உடைத்து 36 பவுன் நகையை கொள்ளையடித்த மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

சிவகாசி,

சிவகாசி தொழில் அதிபர் வீட்டில் பீரோவை உடைத்து 36 பவுன் நகையை கொள்ளையடித்த மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

தொழிலதிபர்

சிவகாசியில் டிரான்ஸ்போர்ட் நடத்தி வருபவர் பிரபல தொழில் அதிபர் பாலகிருஷ்ணன் (வயது 63). இவரது வீடு சிவகாசி கருமன்கோவில் ரோட்டில் உள்ள பராசக்திநகரில் உள்ளது. இயங்கு குடும்பத்துடன் வசித்து வந்த பாலகிருஷ்ணன் சம்பவம் நடந்த அன்று குடும்பத்துடன் திருச்செந்தூர் கோவிலுக்கு சாமிகும்பிட சென்றுள்ளார்.

பின்னர் அவர் வீடு திரும்பியபோது வீட்டில் இருந்து பீரோக்கள் உடைக்கப்பட்டு அதில் இருந்த நகை மற்றும் பணம் ஆகியவை கொள்ளையடிக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். பின்னர் இதுகுறித்து சிவகாசி டவுன் போலீசில் புகார் கொடுத்தார். அந்த புகாரின் பேரில் டவுன் குற்றப்பரிவு இன்ஸ்பெக்டர் பானுமதி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்.

தனிப்படை

கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் வீட்டின் பின்புறம் வழியாக உள்ளே வந்து பின்னர் வீட்டில் இருந்த படுக்கையறைகளில் இருந்த பீரோக்களை உடைத்து அதில் வைக்கப்பட்டிருந்த சுமார் 36 பவுன் தங்க நகைகள் மற்றும் ரூ.1¾ லட்சம் ஆகியவற்றை கொள்ளையடித்து தப்பி சென்றது போலீசாரின் முதல் கட்ட விசாரணையில் தெரியவந்தது.

சிவகாசி துணை போலீஸ் சூப்பிரண்டு பாபுபிரசாந்த் 3 தனிப்படைகளை அமைத்து நகை மற்றும் பணத்ைத கொள்ளை அடித்த மர்மநபர்கள் குறித்து தீவிரமாக விசாரணை நடத்தி வருகிறார். அந்தபகுதியில் உள்ள வீடுகளில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராக்களில் பதிவாகி உள்ள காட்சிகளை வைத்தும் விசாரணை நடத்தப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.

சோதனை சாவடிகள்

சிவகாசி நகரின் எல்லைப்பகுதியில் 5 இடங்களில் சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டு வெளிஆட்கள் நடமாட்டம் கண்காணிக்கப்பட்டு வந்தது. ஆனால் தற்போது அந்த 5 சோதனை சாவடிகளும் போதிய போலீசார் இல்லாமல் செயல்படாமல் இருக்கிறது. இதனால் வெளிநபர்கள் நடமாட்டம் அதிகரித்துள்ளது. மேலும் கடந்த காலங்களை விட தற்போது போலீசாரின் ரோந்து பணி மிகவும் குறைந்துவிட்டது. இதை கொள்ளையர்கள் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக்கொள்கிறார்கள்.

எனவே இனி வரும் காலத்தில் சோதனை சாவடிகள் இயங்க தேவையான நடவடிக்கையை மாவட்ட போலீஸ் நிர்வாகம் எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

மேலும் செய்திகள்