புதுக்கோட்டை
ஒரே நாளில் 36 பேருக்கு காய்ச்சல்
|புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த 36 போ் ஒரே நாளில் காய்ச்சல் காரணமாக மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
36 பேருக்கு காய்ச்சல்
தமிழகத்தில் வைரஸ் காய்ச்சல், டெங்கு காய்ச்சல் பரவலாக உள்ளது. இதனை தடுக்க தமிழக அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. மேலும் காய்ச்சல் முகாம்கள் ஆங்காங்கே நடத்த அறிவுறுத்தப்பட்டுள்ளன. இதில் காய்ச்சல் பரிசோதனை நடத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் புதுக்கோட்டை மாவட்டத்தில் காய்ச்சல் சிறப்பு முகாம்கள் கடந்த 1-ந் தேதி முதல் நடத்தப்பட்டு வருகின்றன. இதில் பொதுமக்களுக்கு காய்ச்சல் உள்பட பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுகின்றன.
இந்த நிலையில் மாவட்டத்தில் நேற்று முன்தினம் ஒரே நாளில் 36 பேர் காய்ச்சல் காரணமாக மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
தனி வார்டு
இதுகுறித்து சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறுகையில், ''புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை உள்பட அரசு மருத்துவமனைகளில் காய்ச்சல் சிகிச்சைக்கு சிறப்பு வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளன. மாவட்டத்தில் டெங்கு பாதித்தவர்கள் எண்ணிக்கை அதிகமாக இல்லை. அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் டெங்கு சிகிச்சைக்கு தனி வார்டு ஏற்படுத்தப்பட்டுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டத்தை சோ்ந்த 5 பேர் வெளி மாவட்டத்தில் காய்ச்சல் பரிசோதனை மேற்கொண்டதில் டெங்கு பாதிப்பு இருந்துள்ளது. மாவட்டத்தில் காய்ச்சல் சிறப்பு முகாம் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகிறது. முகாமில் உரிய சிகிச்சைக்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது'' என்றனர்.